நாடு முழுவதிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் அடுத்த மாதம் தொடக்கம்? தேர்தல் ஆணையம் அதிரடி திட்டம்
புதுடெல்லி: பீகாரில் வரும் அக்டோபர் அல்லது நவம்பரில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது சர்ச்சையானது. இறந்தவர்கள், புலம்பெயர்ந்தவர்களின் பெயர்களையும், சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசம், மியான்மர் போன்ற வெளிநாட்டவர்களின் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கும், தகுதியான நபர்களுக்கு வாக்குரிமையை வழங்குவதே சிறப்பு தீவிர திருத்தத்தின் நோக்கம் என தேர்தல் ஆணையம் கூறுகிறது.
ஆனால் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் பாஜ உத்தரவுப்படி, அக்கட்சிக்கு எதிரானவர்களின் வாக்குரிமை திட்டமிட்டு பறிக்க தேர்தல் ஆணையம் உதவுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி, கேரளாவில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கு முன்பாக நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்நிலையில், நாடு தழுவிய சிறப்பு தீவிர திருத்தத்திற்கான ஆயத்த பணிகள் குறித்து அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளின் ஒருநாள் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில், இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த மாதமே நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை தொடங்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கான தேதியை தேர்தல் ஆணையம் விரைவில் முடிவு செய்து அறிவிக்கவும் திட்டமிட்டுள்ளது.
பீகார் சட்டப்பேரவை தேர்தல் முடிவதற்கு முன்பே நாடு தழுவிய சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) அறிவிப்பு வரக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக நேற்றைய ஆலோசனை கூட்டத்தின்போது, தலைமை தேர்தல் அதிகாரிகளிடம் எஸ்ஐஆர் திருத்தத்திற்கு எவ்வளவு விரைவில் தயாராக முடியும் என்று கேட்கப்பட்டது. பெரும்பாலான அதிகாரிகள் செப்டம்பர் மாதத்திற்குள் ஆரம்பகட்ட பணிகள் முடிக்கப்படும் என்றும், அக்டோபர் மாதத்தில் தயாராக முடியும் என்றும் ஆணையத்திடம் உறுதியளித்தனர். இதன் அடிப்படையில் தேதி முடிவு செய்யப்பட உள்ளது.
மேலும், ஆலோசனை கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பாக மூன்றரை மணி நேரத்திற்கும் மேலாக விளக்க காட்சிகள் மூலம் விளக்கப்பட்டுள்ளது. திருத்தத்தின் போது வாக்காளர்களை சரிபார்க்கப் பயன்படுத்தக்கூடிய ஆவணங்களின் பட்டியலைத் தயாரிக்கவும் தேர்தல் ஆணையம் மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த கூட்டத்தில் பீகாரின் தலைமைத் தேர்தல் அதிகாரி, சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை செயல்படுத்துவதில் தங்களின் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
கடைசியாக நடத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு பிறகு வெளியிடப்பட்ட தங்கள் மாநிலங்களின் வாக்காளர் பட்டியலைத் தயாராக வைத்திருக்குமாறு தலைமை தேர்தல் அதிகாரிகளிடம் கூறப்பட்டது. அதற்கு, சில அதிகாரிகள் ஏற்கனவே தங்கள் கடைசி தீவிர திருத்தத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலை இணையதளத்தில் வெளியிட்டுள்ளதாக கூறி உள்ளனர்.
* 12வது ஆவணமாக ஆதார் ஏற்கப்படுகிறது
பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியின் போது, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஆதார் அட்டை கூடுதல் ஆவணமாக ஏற்கப்படுகிறதா என தலைமை தேர்தல் ஆணையம் பீகார் தேர்தல் அதிகாரியிடம் கேள்வி எழுப்பி இருந்தது. இதற்கு கடிதம் மூலம் பதிலளித்த பீகார் தலைமை தேர்தல் அதிகாரி, ‘‘ஏற்கனவே 11 ஆவணங்கள் ஏற்கப்படும் நிலையில், 12வது ஆவணமாக ஆதார் அட்டை ஏற்கப்படுகிறது’’ என கூறி உள்ளார். ஆதார் அட்டை ஒருவரின் அடையாள சான்றே தவிர குடியுரிமையை நிரூபிக்கும் ஆவணம் இல்லை என தேர்தல் ஆணையம் ஏற்கனவே கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
* தமிழ்நாட்டில் கடைசியாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் கடந்த 2002, 2005ல் நடந்தது. அப்போது தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
* இதே போல, உத்தரகாண்டில் கடந்த எஸ்ஐஆர் 2006ல் நடந்தது. அப்போதைய வாக்காளர் பட்டியல் அம்மாநில தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியாகி உள்ளது.
* பீகாரில் 2003ல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆண்டில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலை அடிப்படையாக கொண்டு தற்போது சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
* பெரும்பாலான மாநிலங்கள் 2002 மற்றும் 2004 க்கு இடையில் வாக்காளர் பட்டியல் திருத்தத்தை மேற்கொண்டன.