வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரியுடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை
புதுடெல்லி: பீகாரில் சிறப்பு தீவிர திருத்தம்(எஸ்ஐஆர்) மேற்கொள்ளப்பட்டு வாக்காளர் பட்டியலில் இருந்து 47 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நாடு முழுவதும் எஸ்ஐஆர் நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்கு டெல்லியில் 2 நாள் மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையில் நடந்த மாநாட்டில் தேர்தல் ஆணையர்கள் எஸ்.எஸ்.சாந்து, விவேக் ஜோஷி மற்றும் பல மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில் பேசிய ஞானேஷ்குமார்,‘‘இந்த மாநாடு ஒரு வழக்கமான சரிபார்ப்பு அல்ல, மாறாக துல்லியமான வாக்காளர் பட்டியல் மேலாண்மை மூலம் நம் ஜனநாயகத்தின் அடித்தளத்தை வலுப்படுத்துவதற்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. வாக்காளர் பட்டியல்களின் துல்லியம் மற்றும் உள்ளடக்கம் எந்த விதமான மாற்றங்களுக்கும் உட்பட்டது அல்ல. மேலும் இந்த பணிகளுக்கு ஒவ்வொரு மாநிலமும் யூனியன் பிரதேசமும் முழுமையாக தயாராக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்,’’ என்றார்.
மாநாட்டில் நேற்று 5 மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார். இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தேர்தல் நடக்க உள்ள மாநிலங்கள்,யூனியன் பிரதேசங்களான அசாம், தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர்கள் தனித்தனியே கலந்துரையாடினர்.
எஸ்ஐஆர் செயல்முறை குறித்து தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரிகளின் விளக்கக்காட்சிகளுக்குப் பிறகு, மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள் எழுப்பிய கேள்விகளுக்கு விளக்கம் அளித்து தெளிவுபடுத்தப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
