வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பின் 12 மாநிலங்களில் வாக்குச்சாவடி எண்ணிக்கை அதிகரிக்கப்படும்
புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பிறகு தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களிலும் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. பீகாரைத் தொடர்ந்து, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, உபி, குஜராத், மேற்கு வங்கம், மபி, ராஜஸ்தான், சட்டீஸ்கர், கோவா, அந்தமான் நிக்கோபர், லட்சத்தீவு ஆகிய 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் அடுத்த மாதம் 4ம் தேதி தொடங்குவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதில், பீகாரைப் போலவே, தீவிர திருத்தத்திற்குப் பிறகு 12 மாநிலங்களிலும் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என தேர்தல் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். பீகாரில் சிறப்பு தீவிர திருத்தத்திற்குப் பிறகு ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் அதிகபட்சமாக 1,200 வாக்காளர்கள் உள்ளனர். இந்த நடைமுறை செயல்படுத்தப்பட்ட முதல் மாநிலமாக பீகார் உள்ளது.
இதற்காக ஏற்கனவே 77,895 ஆக இருந்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 90,712 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாக்காளர்கள் அதிக நேரம் காத்திருக்காமல் விரைவில் வாக்களிக்க முடியும். இதே போல, 12 மாநிலங்களிலும் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அந்தந்த மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, உயரமான அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள் கொண்ட காலனிகள், குடிசைப் பகுதிகளில் புதிய வாக்குச்சாவடிகள் அமைப்பது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அரசியல் கட்சிகளுடன் ஆலோசிப்பார்கள். வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளை அடைய 2 கிமீக்கு மேல் பயணம் செய்யக்கூடாது என்பதை உறுதி செய்யவும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
