Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுக்கும் நடவடிக்கைக்கு உறுதுணையாக இருப்போம்: அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் அறிவிப்பு

சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுக்கும் நடவடிக்கைக்கு உறுதுணையாக இருப்போம் என்று அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் கூறியுள்ளனர். திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் பேசியதாவது: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: தமிழ்நாட்டில் வந்து உங்களுடைய குடியுரிமை சான்று கொடு என்றால் கேட்டால் கொடுக்க முடியுமா? என்னால் கூட கொடுக்க முடியாது. உச்சநீதிமன்ற நீதிபதியை இதை கூறியிருக்கிறார். இவர்கள் என்னென்ன தவறுகள் செய்கிறார்களோ அவற்றில் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். ராகுல் காந்தி ரொம்ப தெளிவாக சொன்னார். வாக்கு திருட்டை நவீன முறையில் தேர்தல் ஆணையம் பிஜேபியும் செய்கிறது என்பதை விளக்கினார்.

வாக்காளர் பட்டியலில் சிலரின் தந்தை பெயர் என்ன என்று பார்த்தால் ஏபிசிடி என போட்டிருக்கிறார்கள். முகவரிக்கு நில் என்று போட்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் இப்படி இருக்கிறார்கள். இப்படியான அவலங்களை தமிழ்நாடு முழுவதும் பரப்பும் நடவடிக்கைக்கு எதிராக முதல்வர் நடவடிக்கை எடுத்திருக்கிறார். நியாயமான சுதந்திரமான ஜனநாயக அடிப்படையில் வெற்றி பெற முடியாது என்பதால், குறுக்கு வழியில் எப்படி எல்லாம் தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி வெற்றி பெறலாம் என்று பாஜக முயற்சி செய்து கொண்டிருக்கிறது.

அதற்கும் தமிழ்நாட்டினுடைய உரிமையை எல்லாம் தாரை வார்த்து கொடுத்தவர்கள் இப்பொழுது மீண்டும் வாக்கு அதிகாரத்தையும் வாக்குரிமையும் அரசியலமைப்புச் சட்டத்தின் பெற்று கொடுத்த உரிமைகளை அவர்கள் எடுப்பதற்கு உறுதுணையாக இருக்கிறார்கள். ஆகவே முதல்வர் எடுக்கின்ற இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் பேரியக்கம் உறுதுணையாக இருக்கும்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: ஜனநாயகத்தின் ஆணிவேரையே அறுக்கும் செயலாக மத்திய அரசின் ஏவுதலில் தேர்தல் ஆணையமே எஸ்ஐஆர் யை முன்னெடுத்துள்ளது. ஆட்சிப் பொறுப்பில் இருந்த கட்சியும், சில கட்சிகளும், அமைப்புகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டிய கடமைகளை செய்யாமல், நேர் எதிரான விமர்சனங்களை இரண்டு நாட்களாக தருகிறார்கள். இதனை புறக்கணித்து விட்டார்கள் என்பது மிகவும் வருத்தத்திற்குரியது. சென்னையில் மட்டும் 3.50 லட்சம் பீகார் மக்கள் இருக்கிறார்கள்.

கோவை திருப்பூரிலும் அதிக எண்ணிக்கையில் பீகார் மக்கள் உள்ளனர். 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கின்படி 34,87,974 வெளி மாநிலத்தவர்கள் தமிழகத்தில் தங்கி உள்ளனர். 14 ஆண்டுகளில் அந்த எண்ணிகை இரட்டிப்பாக இருக்கும். நாடு முழுவதும் சிறப்பு திருத்தம் முடிந்து விட்டால் தமிழகத்தில் வெளி மாநிலத்தினர் சுமார் 75 லட்சம் பேர் தமிழகத்தில் வாக்களிக்கும் அபாயகர நிலை உருவாகும். தமிழ்நாட்டை குறி வைத்து பாஜக இந்த ஏற்பாட்டை செய்துள்ளது. தமிழக வாக்காளர் பட்டியலில் வெளிமாநிலத்தை சேர்த்தவர்களை சேர்க்க முயற்சிகளை முறியடிக்க வேண்டிய பொறுப்பும் தேவையும் கடமையும் இருக்கிறது.

விசிக தலைவர் திருமாவளவன்: இது குடியுரிமையை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல். இந்த தேர்தல் வெற்றியோ, வாக்குரிமையை பறிப்பதோ அவர்கள் நோக்கம் அல்ல. அவர்களின் இறுதி இலக்கை அறிவிப்பதற்கு என்.ஆர்.சி தேவைப்படுகிறது. ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தேர்தல் ஆணையம் இதை செய்வதற்கு எந்த உரிமையும் கிடையாது. ஏற்கனவே பெயர் சேர்த்தல், திருத்துதல், நீக்குதல் ஆகியவை நடந்து கொண்டு தான் இருக்கிறது. எல்லா காலங்களிலும் நடக்கிறது.

ஒவ்வொரு தேர்தலின் போது நடைபெறுகிறது. இதுதொடர்பாக ஒரு குறிப்பிட்ட தேதியை அறிவிக்கிறார்கள். அதற்குள் நாம் தேவையான பெயர் மாற்றங்களை செய்து கொள்ளலாம். மேலும் வாக்காளர் பட்டியலை சரிசெய்வதற்கு கூட போதிய வழிகாட்டு நெறிமுறைகள் இல்லை. அதுமட்டுமின்றி தேர்தல் நடக்கும் ஓராண்டில் இதை செய்யக் கூடாது என சட்டம் உள்ளது. எனவே என்ஆர்சியை நடைமுறைப்படுத்த பார்க்கிறார்கள். இதை கடுமையாக எதிர்க்கிறோம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்: மக்களுடைய உரிமைகள் எப்படியெல்லாம் பாதிக்கப்பட இருக்கிறது வாக்குரிமை எப்படி பறிக்கப்பட இருக்கிறது என்பது சம்பந்தமான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவது ரொம்ப ரொம்ப அவசியம்.

ஒன்றிய பிஜேபி அரசுடைய மாநில உரிமைகளுக்கு எதிரான, மக்கள் உரிமைகளுக்கு எதிரான எல்லா பிரச்னைகளிலும் வலுமிக்க எதிர்ப்பு கருத்துக்களை நாம் தொடர்ந்து வற்புறுத்தி வந்திருக்கிறோம். நம்முடைய எதிர்ப்பை வலிமையாக பதிவு செய்து வந்திருக்கிறோம். ஏதாவது ஒரு வகையில் ஒரு குறைந்தபட்சம் ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் என்கிற முறையில் ஏதாவது ஒரு போராட்ட நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன்: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளால் வாக்குரிமையை பறிக்கிறார்கள். சிறுபான்மையினர் மக்களை குறி வைத்து இது போல் செயல்படுகிறது. எஸ்ஐஆர்ஐ எதிர்கொள்வதற்கு முதலமைச்சர் முன்மொழியும் தீர்மானத்தை உறுதியாக ஆதரிப்போம்.

மநீம தலைவர் கமல்ஹாசன்: உரிய அவகாசம் தந்து, 2026ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலுக்குப் பின்பு, எக்கட்சிக்கும் சார்பற்ற நிலையில் தேர்தல் கமிஷன் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை நடத்த வேண்டும் என அனைத்துக்கட்சி கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் பணியில் தேர்தல் கமிஷன் அவசரம் காட்டுவது ஏன்? தேர்தல் கமிஷன் மீது நம்பிக்கை குறைந்து விட்டது.