Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வாக்காளர் பட்டியல் படிவம் தராததால் நடுரோட்டில் பெண் அதிகாரிக்கு பளார்: சண்டையை விலக்கிவிட்ட பெண்ணுக்கும் அடி

ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் அதிகாரியைப் படிவம் தராத ஆத்திரத்தில் பெண் ஒருவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக வீடு வீடாகச் சென்று தகவல்களைச் சரிபார்த்து வருகின்றனர். ராய்ப்பூரில் உள்ள காளி மாதா வார்டு பகுதியில் வந்தனா சோனி என்ற பெண் அதிகாரி பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சவிதா பட்வால் என்ற பெண், தனக்குரிய வாக்காளர் பட்டியல் திருத்தப் படிவம் ஏன் குறித்த நேரத்தில் வீட்டிற்கு வரவில்லை எனக் கேட்டுத் தகராறு செய்துள்ளார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அந்தப் பெண், அரசாங்கப் பணியில் இருந்த பெண் அதிகாரியை நடுரோட்டில் வைத்துத் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், அவரது சேலையைப் பிடித்து இழுத்துத் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலைக் கண்ட அங்கிருந்த நபர் ஒருவர் சண்டையை விலக்கச் சென்றுள்ளார். அவரையும் அந்தப் பெண் கன்னத்தில் அறைந்து விரட்டியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்துப் பாதிக்கப்பட்ட அதிகாரி வந்தனா சோனி அளித்த புகாரின் பேரில், கம்ஹார்டிஹ் காவல் நிலையப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராய்ப்பூரில் அரசுப் பணியில் உள்ள தேர்தல் அதிகாரி தாக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.