அதிகாலை 4 மணிக்கு எழுந்து 2 வாக்காளரை நீக்கிவிட்டு மீண்டும் தூங்க செல்கிறார்கள்: தேர்தல் ஆணையம் மீது ராகுல் மீண்டும் அட்டாக்
புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி தேர்தல் ஆணையத்தின் மீது தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்றும் கடுமையான குற்றச்சாட்டுக்களை வைத்து சாடினார். நேற்று முன்தினம் வாக்குத்திருட்டில் ஈடுபடுபவர்களை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பாதுகாப்பதாக அவர் குற்றம்சாட்டி இருந்தார். வாக்கு மோசடி செய்பவர்களை பாதுகாப்பதை நிறுத்திவிட்டு வாக்காளர் நீக்கம் தொடர்பான விசாரணையில் கர்நாடாக சிஐடி கோரிய தகவல்களை ஒரு வாரத்திற்குள் வழங்குமாறும் அறிவுறுத்தி இருந்தார்.
ராகுலின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று கூறி தேர்தல் ஆணையம் நிராகரித்தது. இந்நிலையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்றும் தேர்தல் ஆணையத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். ராகுல்காந்தி நேற்று தனது எக்ஸ் தள பதிவில், ‘‘அதிகாலை 4 மணிக்கு எழுந்து , 36வினாடிகளில் இரண்டு வாக்காளர்களின் பெயர்களை நீக்கிவிட்டு. பின் மீண்டும் தூங்குவதற்கு செல்்கிறார்கள். வாக்குத்திருட்டு இப்படித்தான் நடக்கிறது. தேர்தல் பாதுகாவலர் விழித்திருந்தார். திருட்டைப்பார்த்தார், திருடர்களை பாதுகாத்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.