Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த நடவடிக்கை அனைத்துக் கட்சி கூட்டத்தை முதல்வர் கூட்ட வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நேற்று நடந்த திருமண நிகழ்ச்சியில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எஸ்ஐஆர் என்ற சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த நடவடிக்கை கூடாது என்பது திமுக மற்றும் அதன் தலைமையிலான கூட்டணி கட்சிகளின் நிலைப்பாடு. இதுதொடர்பாக நான் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளேன். உடனடியாக தமிழ்நாட்டில் அனைத்து கட்சிக் கூட்டத்தை முதல்வர் கூட்ட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளேன்.

திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள், அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் ஒரு அணியில் இருந்து இந்த எஸ்ஐஆர் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும். இதனை எதிர்த்து திமுக உள்பட பல்வேறு கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து உள்ளது. விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பிலும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. வழக்கு நிலுவையில் உள்ள போது அதனை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்துவது ஏற்புடையது அல்ல.

எனவே முதல்வர் விரைந்து அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். வரும் தேர்தலில் நடிகரின் கட்சியின் நிலை குறித்து மக்கள் முடிவு செய்வார்கள். தேர்தல் முடிவு அதனை தெரிவிக்கும். விடுதலைச்சிறுத்தைகள் கட்சியை பொறுத்தவரை திமுக தலைமையிலான கூட்டணியில் நாங்கள் மிகவும் உறுதியாக உள்ளோம். இதனை பொறுத்துக்கொள்ள முடியாத சகித்துக்கொள்ள முடியாத பாஜ உள்பட சங் பரிவார்கள் எங்கள் மீது சமூக வலைதளங்களில் அவதூறுகளை, விமர்சனங்களை பரப்புகின்றனர்.

எங்களை குறிவைத்து அரசியல் செய்கின்றனர். எப்படியாவது திமுகவுக்கும், விடுதலைச்சிறுத்தைகளுக்கும் இடையே விரிசலை ஏற்படுத்த வேண்டும் என்பது அவர்களின் நோக்கம். ஆனால் அவர்களின் நோக்கம் நிறைவேறாது, ஏமாந்து போவார்கள். எதிர்க்கட்சிகள் உதிரிகளாக சிதறி கிடக்கின்றனர். எனவே திமுக கூட்டணிக்கு தவெக போன்ற கட்சிகளால் எந்த பாதிப்பும் வராது. அதிமுக பாஜவுடன் நீடிக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.

* ‘கேரளாவின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது’

திருமாவளவன் கூறுகையில், ‘‘புதிய கல்விக் கொள்கையை கேரள அரசு எந்த பின்னணியில் ஏற்றுக்கொண்டார்கள் என தெரியவில்லை. பொதுவாக இடதுசாரிகள் புதிய கல்விக் கொள்கையில் எதிர்மறையான விமர்சனங்களை கொண்டு இருக்கிறார்கள். கேரள அரசு விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு ஏற்றுக்கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

தமிழ்நாடு பிற மாநிலங்களுக்கு வழிகாட்ட கூடிய வகையில், புரட்சிகரமான பல முடிவுகளை கடந்த காலங்களிலும் எடுத்துள்ளது. பெரியார், அண்ணா, வழியில் நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளார். தமிழ்நாடு பிற மாநிலங்களுக்கு வழிகாட்டியாகவும், முன்மாதிரியாகவும் இருக்கிறது. புதிய கல்வி கொள்கை விவகாரத்திலும் தமிழ்நாடு முன்மாதிரியாகத்தான் இருக்கும்’’ என்றார்.