புதுடெல்லி: பீகாரில் 5.76லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பீகாரில் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இது குறித்து தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, கடந்த 14ம் தேதி வரையில், மாநிலத்தில் உள்ள மொத்தம் 7.90கோடி வாக்காளர்களில் அதிகாரிகள் நேரடியாக வீடுகளுக்கு சென்று பார்வையிட்டதில் 35.69 லட்சத்துக்கும் அதிகமானோர் அந்த முகவரியில் காணப்படவில்லை.
மேலும் 17.37லட்சம் வாக்காளர்கள் நிரந்தரமாக மாறியிருக்கலாம். மேலும் 5.76லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. 12.55லட்சம் வாக்காளர்கள் இறந்துவிட்டதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. காலக்கெடுவிற்குள் படிவங்கள் பெறப்பட்ட அனைத்து வாக்காளர்களும் இந்த பட்டியலில் இடம்பெறுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்காலிகமாக மாநிலத்தில் இருந்து வெளியேறிச் சென்றிருக்கக்கூடிய வாக்காளர்களுக்கு செய்தித்தாள் விளம்பரங்கள் மற்றும் நேரடித் தொடர்புகள் மூலமாக கவனம் செலுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் அவர்கள் தங்களது படிவங்களை சரியான நேரத்தில் நிரப்ப முடியும், அவர்களின் பெயர்களும் வரைவு பட்டியலில் சேர்க்கப்படுவதையும் உறுதி செய்ய முடியும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.