வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேலும் 5 மனுக்கள் தாக்கல்..!!
டெல்லி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேலும் 5 மனுக்கள் கூடுதலாக தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் திமுக ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த மனுவில் பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் மேற்கொண்டபோது பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றதாகவும் இதற்கு எதிரான வழக்கில் இறுதி உத்தரவை உச்சநீதிமன்றம் இன்னும் பிறப்பிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகளை மேற்கொள்வது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற சில மாதங்களே உள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் மேற்கொள்வது பல்வேறு சிக்கல்களை உருவாகும் என்றும் தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான வாக்காளர்கள் தங்களின் வாக்குரிமையை இழக்கும் அபாயம் ஏற்படும் என்றும் மனுவில் திமுக சுட்டிக்காட்டியுள்ளது. இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேலும் 5 மனுக்கள் கூடுதலாக தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தமிழ்நாடு மாநில செயலாளர் பி. சண்முகம், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, புதுச்சேரி திமுக சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சிவா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் S.I.R-க்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்திற்கு தடைகோரி அனைத்து மனுக்களும் நீதிபதிகள் சூரியகாந்த், ஜாய்மால்யா பாக்சி அமர்வில் உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகின்றன. பீகார் வாக்காளர் பட்டியல் வழக்கும், தலைமைத்தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டத்துக்கு எதிரான வழக்கு அதே அமர்வில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

