Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

வாக்காளர் பட்டியல் சர்ச்சைக்கு மத்தியில் பீகார் சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு: 2 கட்டங்களாக வாக்குபதிவு

புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் சர்ச்சைக்கு மத்தியில் பீகார் சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலில் 121 தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 6ம் தேதியும், 122 தொகுதிகளுக்கான 2ம் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 11ம் தேதி நடைபெறுகிறது. பீகார் தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 14ம் தேதி எண்ணப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்துள்ளார்.

பீகாரில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் (ஐக்கிய ஜனதா தளம், பாஜக, லோக் ஜனசக்தி), எதிர்க்கட்சியான ‘இந்தியா’ கூட்டணிக்கும் (ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள்) இடையே கடும் போட்டி நிலவி வரும் சூழலில், இந்தத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ளது. அதேசமயம் அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி மொத்தமுள்ள 243 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதால், இந்தத் தேர்தல் மும்முனைப் போட்டியாக மாறியுள்ளது.

முன்னதாக, கடந்த ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியின்போது, சுமார் 47 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பீகார் மாநிலத்தின் தற்போதைய சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் நவம்பர் 22ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், தேர்தலுக்கான தேதியை தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தார்.

அதன்படி, பீகாரில் 243 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நவ.6, 11ம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. பீகாரில் முதல்கட்டத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அக்டோபர் 10ம் தேதி தொடங்குகிறது. 2ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் அக்டோபர் 13ம் தேதி தொடங்குகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் நவ. 14ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.