Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை வெளியிட முடியாது: உச்சநீதிமன்றத்தில் தேர்தல் கமிஷன் தாக்கல் செய்த அறிக்கையால் பரபரப்பு

புதுடெல்லி: பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை வெளியிட முடியாது என உச்சநீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையால் அரசியல் கட்சிகளிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு வரையில் பீகார் மாநிலத்தில் சுமார் 65.2 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதுபோன்ற சூழலில் இந்திய தேர்தல் ஆணையத்தின் மேற்கண்ட நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, ‘ஆதார் எண், ரேஷன் அட்டை ஆகியவற்றை இருப்பிட ஆவணங்களாக காண்பிக்க தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும். அதனை ஒட்டுமொத்தமாக நிராகரிக்கக் கூடாது. அதேநேரத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த முறைக்கு நாங்கள் தடை எதுவும் விதிக்கவில்லை.

திட்டமிட்டபடி ஆகஸ்ட் 1ம் தேதி வாக்காளர் திருத்த பட்டியலை வெளியிடலாம்’ என்றும், ‘வாக்காளர் திருத்தப்பட்டியல் விவகாரத்தில் அதிக வித்தியாசம் இருந்தால் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்வோம்’ என்றும் உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்தை எச்சரித்து இருந்தது. குறிப்பாக கடந்த ஒன்றாம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் சிறப்பு திருத்தப்பட்டியலில் விடுபட்ட நபர்கள், சேர்க்கப்பட்ட நபர்கள், எதனால் விடுபட்டார்கள் உட்பட அனைத்து விவரங்களையும் அறிக்கையாக தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது .

இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் ஒரு விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது அதில் கூறப்பட்டுள்ளதாவது: வாக்காளர் பட்டியலில் இருந்து விலக்கப்பட்டதற்கான காரணங்களை வெளியிட சட்டப்பூர்வ ஆணை இல்லை. எனவே, நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை வெளியிட முடியாது. பீகார் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான வழக்கில், இந்திய தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில், வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படாத நபர்களின் தனி பட்டியலை வெளியிடுவதற்கு பொருந்தக்கூடிய விதிகளின் கீழ் கட்டாயமிலை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

மேலும் வரைவு வாக்காளர் பட்டியலில் எந்தவொரு தனிநபரையும் சேர்க்காததற்கான காரணங்களை வழங்க விதிகள் கட்டாயப்படுத்தவில்லை. எந்தவொரு காரணத்தாலும் கணக்கெடுப்பு படிவங்கள் பெறப்படாத நபர்களின் பூத் அளவிலான பட்டியலை அரசியல் கட்சிகளுடன் பகிர்ந்து கொண்டோம், அந்த நபர்களைத் தொடர்புகொள்வதில் அவர்களின் உதவியை ஆணையம் நாடியது. வரைவுப் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, அரசியல் கட்சிகளுக்கு வரைவுப் பட்டியலில் சேர்க்கப்படாத வாக்காளர்களின் புதுப்பிக்கப்பட்ட பட்டியலும் வழங்கப்பட்டது. இதனால் குறிப்பிட்ட நபர்களைச் சென்றடைய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன என்பதையும், தகுதியான வாக்காளர்கள் யாரும் விடுபட்டிருக்க மாட்டார்கள் என்பதையும் தேர்தல் ஆணையத்தின் தரப்பில் இருந்து நாங்கள்உறுதிசெய்கிறோம்.

குறிப்பாக நீக்கப்பட்டவர்களின் விவரங்களை வெளியிட வேண்டும் என்பது கட்டாயமல்ல. அதேபோன்று வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணத்தையும் கண்டிப்பாக கூற முடியாது. மேலும் வரைவுப் பட்டியலில் விடுபட்ட நபர்கள் தங்கள் பெயரைச் சேர்க்கக் கோரி ஒரு அறிவிப்பைச் சமர்ப்பிக்கும் விருப்பம் உள்ளது. அதனை விரைவில் நடைமுறைப்படுத்துவோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை வெளியிட முடியாது என உச்சநீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையால் அரசியல் கட்சிகளிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.