வயநாடு: வாக்கு திருட்டு தொடர்பான ஹைட்ரஜன் குண்டு விரைவில் வெடிக்கும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேற்று வயநாட்டில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “வாக்கு திருட்டில் பயன்படுத்தப்படும் எண்கள் குறித்த தகவல்களை கேட்டு கர்நாடக சிஐடி தலைமை தேர்தல் ஆணையத்துக்கு பலமுறை கடிதங்களை அனுப்பி உள்ளது. ஆனால் அந்த தகவல்களை தேர்தல் ஆணையம் இன்னும் கொடுக்கவில்லை.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சிஐடி கேட்ட தகவல்களை தரவில்லை. தலைமை தேர்தல் ஆணையர் மீது இதைவிட ஒரு பெரிய குற்றச்சாட்டு வேறேதும் இருக்க முடியாது. காவல்துறை தகவல்களை கேட்கிறது. அவர் அதை அளிக்கவில்லை. இது வெறும் எனது அறிக்கை இல்லை. இதுதான் உண்மை. அதற்கு எங்களிடம் கருப்பு வௌ்ளை ஆதாரங்கள் உள்ளது.
வாக்கு திருட்டு செய்து தான் பிரதமர் மோடி தேர்தலில் வெற்றி பெற்றார் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லாத வகையில் காங்கிரஸ் பல ஆதாரங்களை காண்பிக்கும். நான் ஏற்கனவே இரண்டு பத்திரிகையாளர் சந்திப்புகளில் சொன்னதுபோல், தற்போதுள்ள யதார்த்த நிலைமையை முற்றிலும் மாற்றும் ஒரு ஹைட்ரஜன் குண்டு எங்களிடம் உள்ளது.
விரைவில் அது வெடிக்கும். ஆதாரமின்றி நாங்கள் எதையும் சொல்லவில்லை. எங்களிடம் வௌிப்படையான மற்றும் மூடிய ஆதாரங்கள் உள்ளன. நான் என் வேலையை சரியாக செய்வேன். தேர்தல் ஆணையம், விழித்திருந்து, வாக்கு திருட்டை பார்த்து, திருடர்களை பாதுகாத்த ஒரு தேர்தல் காவலாளி” என தெரிவித்தார்.
* வாரணாசி தொடர்புடையதா?
அடுத்து வர இருக்கும் ஹைட்ரஜன் குண்டு பிரதமர் மோடி வெற்றி பெற்ற வாரணாசி தொகுதியுடன் தொடர்புடையதா என்று ராகுல்காந்தியிடம் கேட்ட போது, ‘‘அது உங்கள் யூகம். அது நீங்கள் செய்ய வேண்டியது. நான் என்னுடைய வேலையை சிறப்பாக செய்வேன்’ என்றார்.