டெல்லியிலும் ஓட்டு, பீகாரிலும் ஓட்டு 2 மாநில சட்டப்பேரவை தேர்தலிலும் எப்படி வாக்களிக்க முடியும்? பா.ஜ தலைவர்களிடம் ராகுல்காந்தி கேள்வி
பாட்னா: டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்.5ஆம் தேதி தேர்தல் நடந்தது. அங்கு ஓட்டு போட்ட பா.ஜ தலைவர்கள் பீகாரில் நேற்று முன்தினம் நடந்த முதற்கட்ட தேர்தலிலும் வாக்களித்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆம்ஆத்மி மூத்த தலைவர் சவுரப் பரத்வாஜ் தான் இதை முதலில் வெளிப்படுத்தினார். அவரது எக்ஸ் தளத்தில்,’ டெல்லி தேர்தலிலும் பீகார் தேர்தலிலும் ஒரே மாதிரியான நபர்கள் வாக்களித்த 3 நபர்களின் வீடியோக்களை நான் பகிர்ந்துள்ளேன். முதலாம் நபர் பாஜ நிர்வாகி நாகேந்திர குமார், இரண்டாவது பாஜ டெல்லி பூர்வாஞ்சல் மோர்ச்சா தலைவர் சந்தோஷ் ஓஜா, மூன்றாவது பாஜவின் மாநிலங்களவை எம்பியும், ஆர்.எஸ்.எஸ் சிந்தனையாளரும், டெல்லி பல்கலைக்கழக பேராசிரியருமான ராகேஷ் சின்ஹா என்று குறிப்பிட்டு அவர்கள் டெல்லி தேர்தலிலும், பீகார் தேர்தலிலும் வாக்களிக்கும் படங்களை வெளியிட்டார்.
இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. டெல்லியில் குடியிருப்பை கொண்டுள்ள அவர்கள் எப்படி பீகாரிலும், டெல்லி சட்டப்பேரவை தேர்தலிலும் வாக்களிக்க முடியும் என்ற கேள்வியை எழுப்பியது. இதற்கு ராகேஷ்சின்ஹா எம்பி மட்டும் கடந்த ஏப்ரல் மாதம் பீகார் மாநிலத்திற்கு தனது வாக்குரிமையை மாற்றி விட்டதாக விளக்கம் அளித்தார். மற்ற யாரும் விளக்கம் அளிக்கவில்லை. இதே குற்றச்சாட்டை நேற்று பீகார் இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கும் பங்காவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி எழுப்பினார்.
அவர் கூறுகையில்,’ டெல்லியில் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்திய பாஜ தலைவர்கள், பீகார் சட்டப்பேரவை தேர்தலின் முதல் கட்ட தேர்தலிலும் வாக்களித்தனர். இதுவும் வாக்கு திருட்டுக்கான ஆதாரம் தான். டெல்லியில் ஓட்டு போட்டவர்கள் எப்படி, பீகார் சட்டப்பேரவை தேர்தலில் ஓட்டு போட முடியும்? தேர்தல் ஆணையம் இந்த குற்றச்சாட்டுகளை மறுக்க முடியாது. அரியானாவில் உள்ள 2 கோடி வாக்காளர்களில், 29 லட்சம் வாக்காளர்கள் போலியானவர்கள். மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், அரியானாவில் பாஜ வாக்கு திருட்டில் ஈடுபட்டது. இப்போது பீகாரிலும் அதை மீண்டும் செய்ய முயற்சிக்கிறது. ஆனால், பீகார் மக்கள் தங்கள் மாநிலத்தில் இது நடக்க அனுமதிக்க மாட்டார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்’ என்று கூறினார்.
* பிரேசில் மாடல் அழகியை போல் வைரலாகும் புனே இளம் பெண்
அரியானா தேர்தலில் பிரேசில் மாடல் அழகி மாத்யூஸ் பெரோரோ பெயரில் வாக்கு திருட்டு நடந்ததாக ராகுல்காந்தி குற்றம் சாட்டியிருந்தார். இதை தொடர்ந்து அவரது பெயர் உலகம் முழுவதும் பிரபலமானது. தற்போது மகாராஷ்டிரா மாநிலம் புனேயை சேர்ந்த இளம்பெண் படமும் இணையதளத்தில் அதே போல் வைரலாகி வருகிறது. உர்மி என்ற பெயரில் உள்ள அவர் 2024 மக்களவை தேர்தலில் புனேயில் வாக்களித்துள்ளார். தற்போது பீகாரில் வாக்களித்துள்ளதாக அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். புனே, பீகாரில் வாக்களித்த படங்களை அவர் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவும் சர்ச்சையாகி வைரலாகி வருகிறது. இரண்டு தனித்தனி பதிவுகள் வாக்களித்த பிறகு மை பூசப்பட்ட விரலுடன் அவர் போஸ் கொடுப்பதைக் காட்டுகின்றன. இரண்டு படங்களும் இரண்டு வெவ்வேறு தேர்தல்கள் மற்றும் இரண்டு வெவ்வேறு மாநிலங்களிலிருந்து வந்தவை என்று கூறப்படுகிறது. இது சர்ச்சையானதால் அந்த பெண் திடீரென புதிதாக ஒரு பதிவு செய்தார். அதில்,’ பீகார் தேர்தல் நாளில் நான் வாக்களித்ததாக ஒருபோதும் கூறவில்லை. இது வெறும் உந்துதலுக்காகத்தான். நான் ஓட்டுபோட்டது மகாராஷ்டிராவில் தான் என்று அனைவருக்கும் தெரியும். இப்போது உங்கள் முறை, பீகார். போய் வாக்களியுங்கள்’ என்று குறிப்பிட்டார்.

