இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை பீகாரில் ஆட்சியை பிடிப்பது யார்? பகல் 12 மணிக்கு முடிவு தெரியும்
பாட்னா: நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள பீகார் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. அங்கு புதிய ஆட்சி அமைப்பது யார் என்பது பகல் 12 மணிக்கு தெரிந்து விடும். 243 தொகுதிகள் கொண்ட பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடக்கிறது. அங்கு கடந்த 6, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடந்தது.
ஆளும் தே.ஜ. கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம், பாஜ தலா 101 தொகுதிகள், லோக் ஜன சக்தி-ராம் விலாஸ்-29, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா 6, இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா 6 தொகுதிகளில் போட்டியிட்டன. இந்தியா கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம் 143, காங்கிரஸ் 61, இந்திய கம்யூனிஸ்ட்-எம்எல் 20, விஐபி 15, இந்திய கம்யூனிஸ்ட் 9, மார்க்சிஸ்ட் 4 தொகுதிகளில் களம் கண்டன. தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டன.
நடந்து முடிந்த இரு கட்ட தேர்தலிலும் வரலாறு காணாத அளவுக்கு வாக்குப்பதிவாகி உள்ளது. 121 தொகுதிகளுக்கு கடந்த 6ஆம் தேதி நடந்த முதற்கட்ட தேர்தலில் 65 சதவீத வாக்குகள் பதிவான. 122 தொகுதிகளுக்கு 11ஆம் தேதி நடந்த 2ம் கட்டதேர்தலில் 68.8 சதவீத வாக்குகள் பதிவாகின. இதனால் பீகாரில் இதுவரை இல்லாத வரலாற்று சாதனையாக மொத்தம் 67.13 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. பீகாரில் ஆட்சியமைக்க 122 இடங்கள் தேவைப்படும் நிலையில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணிக்கு 140க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் பீகார் சட்டப்பேரவையில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு எண்ணப்படும். பீகார் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் மொத்தம் 46 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதலில் தபால் ஓட்டுகளும், அதை தொடர்ந்து மின்னணு இயந்திர வாக்குகளும் எண்ணப்பட உள்ளன. இதையொட்டி வாக்கு எண்ணிக்கை நடக்க இருக்கும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. துணை ராணுவ வீரர்கள், உள்ளூர் போலீசார் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே முன்னணி நிலவரம் தெரிந்துவிடும். பகல் 12 மணி அளவில் பீகாரில் புதிய ஆட்சி அமைப்பது யார் என்பது தெளிவாக தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் நாடு முழுவதும் பீகார் தேர்தல் முடிவை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறது.
* அதிகாரப்பூர்வ முடிவுகளை மட்டுமே வெளியிட வேண்டும் ஊடகங்களுக்கு தேர்தல் ஆணையம் அறிவுரை
பீகாரின் 243 தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கைக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பீகாரில் ஓட்டு எண்ணிக்கைக்காக 4,372 வாக்கு எண்ணிக்கை மேசைகள் அமைக்கப்பட்டுள்ளன. வேட்பாளர்களால் நியமிக்கப்பட்ட 18,000க்கும் மேற்பட்ட வாக்கு எண்ணிக்கை முகவர்களும் வாக்கு எண்ணிக்கை செயல்முறையை மேற்பார்வையிடுவார்கள். காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். முதலில் தபால் வாக்குகளும், காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.
முடிவுகள் தொகுக்கப்பட்டு, தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ முடிவுகள் போர்ட்டலில் அந்தந்த தேர்தல் அதிகாரிகளால் சுற்று வாரியாக மற்றும் தொகுதி வாரியாக அறிவிக்கப்படும். துல்லியமான மற்றும் சரிபார்க்கப்பட்ட புதுப்பிப்புகளுக்கு இந்த போர்ட்டலை மட்டுமே பார்க்க வேண்டும். எந்தவொரு வதந்தி அல்லது அதிகாரப்பூர்வமற்ற ஆதாரங்களை நம்ப வேண்டாம். தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் இணைய ஊடக சேனல்களும் அதற்கேற்ப செயல்பட அறிவுறுத்தப்படுகின்றன என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
* நேபாள சூழலை பீகார் காணும் லாலு கட்சி எச்சரிக்கை
பீகார் சட்டப்பேரவை தேர்தலில் கடந்த 2020ஆம் ஆண்டு வாக்கு எண்ணிக்கை திடீரென 4 மணி நேரம் நிறுத்தப்பட்டது. அதுபோன்ற சூழல் ஏற்பட்டால் ஜென்இசட் இளைஞர்கள் போராட்டம் நடத்திய நேபாளத்தை போன்ற சூழலை பீகார் காணும் என்று லாலுகட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
* ஒன்றியத்தில் ஆட்சி மாற்றத்துக்கு வழிவகுக்குமா?
பீகாரில் தே.ஜ. கூட்டணி வெற்றி பெற்றால் அக்கட்சி மீண்டும் வலுபெற்றதாக அமையும். மாறாக இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் ஒன்றிய அரசின் ஆட்சி மாற்றத்துக்கு வழி வகுக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தோல்வி காரணமாக நிதிஷ்குமார் தலைைமயிலான ஐக்கிய ஜனதாதளம் தேஜ கூட்டணிக்கு முழுக்கு போட்டால், அந்த கட்சியின் 12 எம்.பி.க்களின் ஆதரவு மோடி அரசுக்கு இல்லாமல் போய்விடும். ஆனாலும், அவர்களை தவிர 280எம்.பிக்களின் ஆதரவு மோடி அரசுக்கு உள்ளதால், ஆட்சிக்கு ஆபத்து ஏற்படாவிட்டாலும் கூட்டணிக்கு பெரும் சறுக்கலாக அமையும் என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
* செனாரி தொகுதி தேர்தல் அதிகாரி திடீர் டிஸ்மிஸ்
பீகாரில் இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ள நிலையில் செனாரி தொகுதி தேர்தல் அதிகாரியை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. செனாரி தொகுதி தேர்தல் அதிகாரி லலித் பூஷண் ரஞ்சனை வாக்கு எண்ணிக்கை செயல்முறை உட்பட அனைத்து தேர்தல் தொடர்பான பணிகளிலிருந்தும் உடனடியாக விடுவிக்குமாறு தலைமை தேர்தல் அதிகாரி வினோத் சிங் அதிரடியாக உத்தரவிட்டார். ரோஹ்தாஸ் மாவட்ட கூடுதல் கலெக்டராக இருக்கும் லலித் பூஷண் ரஞ்சன் ஏன் நீக்கப்பட்டார் என்பது உடனடியாகத் தெரியவில்லை. லலித் பூஷண் ரஞ்சனுக்கு பதில் ரோஹ்தாஸின் மாவட்ட நிலம் கையகப்படுத்தும் அதிகாரி ஜாபர் ஹசன் புதிய தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
* இவிஎம் எந்திரங்களுடன் வாக்கு எண்ணும் மையத்தில் நுழைந்த லாரி
பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் உள்ள சாசாரம் வாக்குபதிவு மையத்தில் எந்தவித முன்னறிவிப்பு இல்லாமல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஏற்றப்பட்ட லாரி நுழைந்ததாக லாலுபிரசாத்யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியினர் குற்றம் சாட்டி உள்ளனர். இந்த குற்றச்சாட்டை ரோஹ்தாஸ் மாவட்ட தேர்தல் அதிகாரி உதிதா சிங் நிராகரித்தார்.
இருப்பினும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில்,’ சாசாரத்தில் (ரோஹ்தாஸ் மாவட்டம்) உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்குள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஏற்றப்பட்டதாகக் கூறப்படும் லாரி எந்த முன் தகவலும் இல்லாமல் ஏன் அனுமதிக்கப்பட்டது? லாரி ஓட்டுநர் ஏன் மக்கள் முன் ஆஜர்படுத்தப்படவில்லை? பிற்பகல் 2 மணிக்குப் பிறகு சிசிடிவி கேமரா ஊட்டம் ஏன் கிடைக்கவில்லை?’என்று கேள்வி எழுப்பியது.
இது குறித்து தேர்தல் அதிகாரி உதிதா சிங் கூறுகையில், ‘முறையான போலீஸ் சோதனை மற்றும் பதிவு புத்தக உள்ளீட்டிற்குப் பிறகு புதன்கிழமை இரவு 7.59 மணிக்கு பஜார் சமிதி வாக்கு எண்ணும் மையத்திற்குள் லாரி நுழைந்தது. இருப்பினும் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் புகார்களைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகக் குழு சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தியது.
ஒவ்வொரு பெட்டியும் திறக்கப்பட்டு, அரசியல் கட்சிகள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களால் நிறுத்தப்பட்டிருந்தவர்கள் மற்றும் ஏராளமானோர் இருந்தவர்கள் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டது. குற்றச்சாட்டுகள் தவறானவை. ரிசல்ட் வரும் நேரம் உணர்ச்சிபூர்வமானது என்பதால் இதுபோன்ற தவறான வதந்திகளைப் பரப்ப வேண்டாம்’ என்றார். ஆனால் காலியான இரும்பு பெட்டிகள் நிறைந்த லாரி வாக்கு எண்ணிக்கை வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டதற்கான காரணத்தை தேர்தல் அதிகாரி விளக்கவில்லை.
* 243 உறுப்பினர்கள் கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்தது. இதில் வரலாறு காணாத அளவுக்கு 67.13 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
* பீகாரில் உள்ள 38 மாவட்டங்களில் மொத்தம் 46 வாக்கு எண்ணும் மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இதில் 2,616 வேட்பாளர்களின் தலைவிதி நிர்ணயிக்கப்பட உள்ளது.
