Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வாக்குத் திருட்டு.. மென்பொருளை பயன்படுத்தாமல் விட்ட தேர்தல் ஆணையம்: வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி ரிப்போர்ட்!!

டெல்லி: ஹரியானா மாநிலம் வாக்கு திருட்டு குறித்து ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து போலி வாக்காளர்களை நீக்குவதற்கான மென்பொருளை தேர்தல் ஆணையம் முறையாக பயன்படுத்தாமல் உள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஒரே புகைப்படத்தை கொண்டு பல போலி வாக்காளர்கள் இணைக்கப்படுவதை கண்டறிந்து தடுப்பதற்காக CDAC நிறுவனம் உருவாக்கிய மென்பொருளை தேர்தல் ஆணையம் பயன்படுத்தி வந்தது. 2022ம் ஆண்டு இந்த மென்பொருளை பயன்படுத்தி நாடு முழுவதும் சுமார் 3 கோடி போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்பிறகு வாக்காளர் பட்டியல் குறித்த புகார்கள் எழுந்தபோதும் அந்த மென்பொருளை பயன்படுத்தும் நடைமுறையை தேர்தல் ஆணையம் நிறுத்தி விட்டது. பிரேசில் மாடல் அழகியின் புகைப்படம் உள்பட பல்வேறு போலி புகைப்படங்களை பயன்படுத்தி ஹரியானாவில் லட்ச கணக்கான வாக்குகள் திருடப்பட்டதாக ராகுல் காந்தி புகார் கூறியுள்ள நிலையில், இந்த மென்பொருள் பயன்பாடு பேசும்பொருளாகி உள்ளது. எஸ்.எஸ்.ஆர் அதாவது சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் மேற்கொண்டு வந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் நிறுத்தியதே போலி வாக்காளர் அதிகரிப்பிற்கு காரணம் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் சிலர் தெரிவிக்கின்றன.

2008ம் ஆண்டு முதல் 2024 வரையிலான காலத்தில் இருமுறை மட்டுமே எஸ்.எஸ்.ஆர். நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டதும் விவாத பொருளாகி உள்ளது. அக்டோபர் 27ம் தேதி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்த கேள்வி எழுப்பப்பட்ட போது வீடு வீடாக சென்று சரிபார்க்கும் பணி நடைபெறாத போது மட்டுமே தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாகவும், தற்போது எஸ்.ஐ.ஆர். நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் தலைமை தேர்தல் ஆணையம் ஞானேஷ் குமார் பதில் அளித்தார். எனினும் ராகுல் காந்தி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஒரே புகைப்படத்தை கொண்டுள்ள போலி வாக்காளர்களை அடையாளம் கண்டு நீக்குவதற்காக சிடிஏசி நிறுவனத்தின் மென்பொருளை தேர்தல் ஆணையம் மீண்டும் பயன்படுத்துமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.