டெல்லி: வாக்குகள் திருடப்பட்டதாக பொய்யான தகவலை ராகுல் பரப்புகிறார் என ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். வாக்கு திருட்டு குறித்து இன்று ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். மத்தியில் ஆளும் பாஜக, தேர்தல் ஆணையத்தை தனது கைப்பாவையாக வைத்துக்கொண்டு வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். அந்த வகையில், இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, பாஜக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இந்நிலையில், வாக்குத் திருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுக்கு கிரண் ரிஜிஜு பதில் அளித்துள்ளார். ஹரியானா தேர்தலில் காங்கிரஸ் வாக்குச் சாவடி முகவர்களே எந்தப் புகாரும்
கூறவில்லை. முறைகேடுகளைத் தடுக்க வாக்காளர் பட்டியல் பலமுறை சரிபார்க்கப்பட்டது. காங்கிரஸின் தோல்வியை மறைக்க ராகுல் அவதூறு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குத் திருட்டு என கூறி அரசுக்கு எதிராக இளம் வாக்காளர்களைத் தூண்டிவிடுகிறார் ராகுல் காந்தி. இளம் வாக்காளர்கள் எப்போது பிரதமர் மோடியின் பக்கமே இருக்கின்றனர். ராகுலின் பலவீனத்தை மறைக்க மின்னணு வாக்கு இயந்திரங்கள் மீது பழி போடுகிறது காங்கிரஸ். உண்மையான பிரச்சினையை எதிர்கொள்வதற்கு பதிலாக கவனத்தைத் திசைதிருப்பும் உத்தியை கையாளுகிறார் ராகுல் காந்தி. இவ்வாறு அவர் கூறினார்.
