அதிமுக முன்னாள் அமைச்சரும், அதிமுக தொண்டர் உரிமை மீட்பு குழுவை சேர்ந்தவருமான வைத்திலிங்கம் தஞ்சாவூரில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அதிமுகவில் இருப்பவர்களும் சரி, பிரிந்து போனவர்களும் சரி அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள், எதிர்பார்க்கிறார்கள், அதை வௌிப்படையாகவும் பேசுகிறார்கள். அதிமுக ஒன்றிணைந்தால் தான் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியை தர முடியும் என்பதை உணர்ந்திருக்கிறார்கள்.
என்னை சந்திக்கும் பொதுமக்களும் கூட அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்றுதான் சொல்கிறார்கள். அப்படிப்பட்ட தொண்டர்களின் எண்ணத்தை செங்கோட்டையன் வௌிப்படுத்தியிருக்கிறார். அது வரவேற்கத்தக்கது. ஏனென்றால் அவர் எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரிடமும் நல்ல மதிப்பை பெற்றவர். இந்த கட்சி நன்றாக இருக்க வேண்டும் என்ற நல்ல மனதுடன், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அவர் சொன்னதை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். எல்லா தொண்டர்களும் இதை வரவேற்பார்கள்.
எங்களிடம் அவர் தொடர்பில் இல்லை. அவர் தற்போது எடப்பாடி தலைமையிலான அதிமுகவில் இருக்கிறார். அவருக்கு அங்கு ஆதரவு அதிகமாக இருக்கிறது. அவருடைய எண்ணத்தை அனைத்து தொண்டர்களும் விரும்புகின்றனர். இதை எல்லோரும் வரவேற்கின்றனர். அவர் 10 நாட்கள் வரை கெடு கொடுத்துள்ளார். அதன் பிறகு எனது கருத்தை தெரிவிக்கிறேன். அதிமுகமுக மீது அனைத்து தரப்பு மக்களும் பாசம் வைத்துள்ளனர். அதிமுகவினர் ஒன்றிணைவதற்கு தடையாக இருப்பவர்கள் மீது கோபமாகவும் இருக்கின்றனர். அதிமுக கட்சித்தொண்டர்களில் ஒருவராக செங்கோட்டையன் பேசியுள்ளார்.