Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தொகுதிகளை பிடிப்பதில் மாஜிக்கள் மும்முரமாக இருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘ஐந்து சீட்டுக்கு ஒர்த் இல்லை. இலைக்கட்சிக்கு ரெண்டு சீட்டு போதும் என்ற தாமரையின் கெடுபிடியால் மாநில செயலாளர் குமுறுகிறாராமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கடந்த சட்டமன்ற தேர்தலில் புதுச்சேரியில் தேஜ கூட்டணியில் 5 இடங்களில் போட்டியிட்ட இலைக்கட்சி அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்தது. அதோடு உட்கட்சி பூசலில் கட்சி கட்டுமானமும் ஆட்டம் கண்டது. ஒருபக்கம் உரிமை மீட்புக்குழு சக்தி தரப்பும், மற்றொரு பக்கம் இலைக்கட்சியில் புரி ஒரு கோஷ்டியாகவும் செயல்பட்டு கட்சியின் ஒவ்வொரு செங்கல்லாக பிடுங்கி வர்றாங்க..

தற்போது எஞ்சியிருப்பது, மாநில செயலாளர் லவ் கட்சி மட்டுமே என, தாமரை தரப்பு பங்கமாக கலாய்த்து வருகிறதாம்.. எனவே இந்த முறை 5 சீட்டுக்கு இலைக்கட்சிக்கு ஒர்த் இல்லை. ஏதாவது நாமே பார்த்து இரண்டு சீட்டு கொடுப்போம் எனக்கூறி வருகிறதாம்.. தாமரைக்காரங்க சொல்வது குறித்து கேள்விக்கு பதில் அளித்த லவ், வேலையற்ற வீணர்களின் தேவையற்ற வார்த்தைகளை தொண்டர்களும், நிர்வாகிகளும் புறந்தள்ள வேண்டும்.

எந்தெந்த கட்சி எத்தனை இடங்களில் போட்டியிடும் என்பதை அந்தந்த கட்சியின் தலைமைதான் அறிவிக்கும். அதற்கு கட்டுப்பட வேண்டியதுதான், என எம்ஜிஆர் பாணியில் பாட்டு பாடினாராம்.. ஆனாலும் கடந்த முறைபோல தாமரையிடம் கேட்டு சீட்டு வாங்கிக்கொள்ளுங்கள் என அதிமுக தலைமை புதுச்சேரியை கைகழுவிட்டதை நினைத்து இப்போதே கவலைப்பட தொடங்கிட்டாங்களாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

‘‘தொகுதிகளைப் பிடிப்பதில் மாஜிக்கள் மும்முரமாக இருக்கிறார்கள் போலிருக்கிறதே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.  ‘‘சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளை உறுதி செய்யும் பணிகளில் மாஜிக்கள் பலரும் இப்போதே ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் கடைகோடி மாவட்டத்தில் 10 முறை மக்களவை தேர்தலில் போட்டியிட்ட பொன்னானவர் இந்த முறை சட்டமன்ற தேர்தலில் 2 வது முறையாக மீண்டும் களமிறங்க ஆர்வம் காட்டி வருகிறாராம்.

கடந்த முறை இலை கட்சி போட்டியிட்டு வென்ற தொகுதியில் இந்த முறை மலராத கட்சி சார்பில் போட்டியிட்டால் என்ன என்று சிந்திக்கிறாராம். மாற்றாக இலை கட்சிக்கு மாநகர சட்டமன்ற தொகுதியை ஒதுக்கவும் திட்டமிட்டுள்ளாராம். இது தொடர்பாக கட்சி தலைமையிடம் தொகுதி பங்கீட்டின்போது பேசவும் ஆயத்தமாகி வருகிறாராம். இதனால் தங்களுக்கு தொகுதி கிடைக்கும் என்று இரு கட்சியிலும் கணக்கு போட்டு வைத்திருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனராம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘போதையில் அதிகாரியின் டார்ச்சர் அளவுக்கு மீறி போகுதாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மான்செஸ்டர் மாநகர் ஆயுதப்படையில் உள்ள அதிகாரி ஒருவர் அடிக்கடி மதுபோதையில் டூட்டிக்கு வருகிறாராம். சமீபத்தில ஒன்றிய அமைச்சர் தங்கிருந்த ஓட்டலுக்கு பாதுகாப்பு பணிக்கு வந்த போது கூட, புல்போதையில் தான் அதிகாரி இருந்ததா சொல்றாங்க. அதிகாரி ஆயுதப்படைக்கு வந்த பின்னர் சக போலீசாரை நிம்மதியாக இருக்க விடுவதில்லையாம்.

எஸ்எஸ்ஐ, ஏட்டு, மோட்டார் பிரிவில் பணியாற்றும் போலீஸ்காரர்களை எல்லாம் தாலூகா ஸ்டேசன்களுக்கு கட்டாய மாறுதலில் அனுப்பி வைக்கிறாராம். அதிகாரியோட உத்தரவை கேட்காத போலீஸ்க்கு இரவு நேரங்களில் மதுபோதையில் போன் செய்து காது கூசும் அளவுக்கு கெட்ட வார்த்தைகளில் திட்டுகிறாராம். அதோடு தனக்கு கீழ் பணியாற்றும் போலீஸ்காரர்களை தன்னோட விவசாய தோட்டத்திற்கு வேலைக்கு செல்ல கட்டாயப்படுத்துவதாகவும் புகார் இருக்கு.

அதிகாரியோட நடவடிக்கைகள், டார்ச்சர் விபரம் எல்லாம் முழு பட்டியல் தயாரிச்சு பாதிக்கப்பட்ட போலீஸ் தரப்பில் இருந்து உயர் அதிகாரிகளுக்கு சமீபத்தில் அனுப்பி வைத்தார்களாம். ஆனா அதிகாரி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படலைன்னு பாதிக்கப்பட்ட போலீஸ் புலம்பி வருகிறார்கள்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘இலை கட்சி தலைவர் மீது பழைய நிர்வாகிகள் அதிருப்தியில் இருக்கிறதா சொல்றாங்களே.. என்னா விஷயம்..’’ என ஆர்வத்தோடு கேட்டார் பீட்டர் மாமா.

‘‘தேர்தலுக்காக இலை கட்சி தலைவர் மேற்கொண்டுள்ள பயணத்தால் இப்போதுள்ள நிர்வாகிகள் மட்டுமின்றி பழைய நிர்வாகிகளும் கடும் அதிருப்திக்கு ஆளாகியுள்ளார்களாம். அவரது சுற்றுப்பயணத்தின்போது அவருக்கு வேண்டப்பட்டவர்களை மட்டுமே பக்கத்தில் வைத்துக் கொண்டு பேசுகிறாராம். சமீபத்தில் தூங்கா நகர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, மாஜி தெர்மாகோல் மந்திரியை காரில் ஏற்றாமல் அவமானப்படுத்தியது, மாநிலம் முழுவதும் பழைய நிர்வாகிகள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியிருக்காம்.

ஆட்சியை பிடிக்கணுங்கிற ஆர்வத்துல சுத்தி வர்ற தலைவர் இதுபோல் ஒரு தரப்பை மட்டும் பக்கத்தில் வைத்துக் கொள்வது தேர்தல் நேரத்தில் உதவாது. அம்மா காலத்துல அவங்க ஒரு மாவட்டத்துக்கு வர்றாங்கனா, மாஜி மாவட்ட செயலாளர்கள் உட்பட மாஜி நிர்வாகிகள், மாஜி மந்திரிகள் எல்லாரையும் பேர் சொல்லி கூப்பிட்டு பேசுவாங்களாம். ஒரு முறை மாம்பழ மாவட்டத்துக்கு போன அம்மா, இலை கட்சி தலைவரான எடக்கானவரை பேர் சொல்லி கூப்பிட்டு பக்கத்துல நிக்க வச்சாங்களாம்.

ஆனா, இப்போதைய இலை கட்சி தலைவர் என்னவோ அந்த அம்மாவை விட பெரிய தலைவர்போல பந்தா செய்வது பல நிர்வாகிகளையும் வருத்தத்தில் ஆழ்த்தியிருக்காம். அவரை யாரு அடிக்கடி போயி சந்திச்சு காலில் விழுறாங்களோ அவங்களை முழுசா நம்பறாராம். மத்தவங்களை கண்டுக்கிறது இல்லையாம். இவரோட இந்த போக்குதான் தலைநகரின் வடபகுதியை சேர்ந்த ஜெயமானவர், தலைவரோட மாவட்டத்தை சேர்ந்த சிவப்பு மலையானவர், கோட்டையானவர் என மூத்த நிர்வாகிகள் ஒதுங்கி இவரோட ஆட்டத்தை வேடிக்கை பார்க்க முடிவு செஞ்சிருக்காங்களாம்.

குறிப்பாக வெயிலூர் மாவட்டத்துல அந்த அதிருப்தி குரல் ஓங்கி ஒலிக்குதாம். போன எலக்சன்லையே இப்போதைய நிர்வாகிகளின் லட்சணம் தெரிஞ்சுபோச்சு. பல பூத்துகளில் ஆளே இல்லை. இதுல விவரம் தெரிஞ்ச, தலைவர் காலத்துல இருந்து கட்சியில ஓடிட்டு இருக்கிற எங்களுக்கு எவ்வளவு தெரியும் என்று குமுறிக் கொண்டிருக்கிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.