‘வீரன் சாவதே இல்லை. கோழை வாழ்வதே இல்லை’ என்றார் கலைஞர். கடந்த 4 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒன்றிய அரசுக்கு எதிராக திமுகவின் ஒவ்வொரு போராட்டங்களும் அந்த வகையில் வீரனுக்குரிய வீரியத்தை வெளிப்படுத்துகின்றன. தமிழை காக்கவும், தமிழ்நாட்டை காக்கவும், மாநில உரிமைகளை காக்கவும் இன்று இந்தியாவிலே ஒன்றிய அரசிடம் முட்டி மோதுகிற முன்னணி மாநிலமாக தமிழகமே உள்ளது. மாநில உரிமைகளை காக்கிற உணர்வு இன்று, நேற்றல்ல, ஆண்டாண்டு காலமாக திராவிட மண்ணில் ஊறிக் கிடக்கிறது. ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தில் தலைமைச் செயலகத்தில் மாநில முதல்வர்கள் தேசிய கொடியேற்றும் உரிமையை முதன்முதலில் பெற்று தந்தவர் கலைஞர். அவரது வழியில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் இன்று மாநில உரிமைகளை காப்பதிலும், அதிமுக ஆட்சிக்காலத்தில் இழந்துவிட்ட உரிமைகளை மீட்பதிலும் தனிக்கவனம் செலுத்தி வருகிறார்.
நீட் தேர்வு, உதய் மின்திட்டம், சொத்து வரிவிதிப்பு உள்ளிட்ட ஒன்றிய பாஜ அரசின் சதித் திட்டங்களுக்கு முந்தைய அதிமுக அரசு துணைபோனது. இன்று அவற்றிற்கு எதிராக நாடாளுமன்றத்தில் திமுக கூட்டணி கட்சிகள் வலுவான குரல் எழுப்புவதோடு, தமிழ்நாட்டின் உரிமைகளை காத்திட சட்ட போராட்டத்தையும் ெதாடர்ந்து நடத்தி வருகின்றன. ஒன்றிய பாஜ அரசு தன்னால் ஆட்சிக்கு வர முடியாத மாநிலங்களில் எல்லாம் கவர்னர்கள் கையில் பிரம்பை கொடுத்து சட்டாம்பிள்ளைத்தனம் செய்து வருகிறது. கவர்னர்கள் ஆடுகிற ஆட்டம், அவர்கள் ஏதோ மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் போலவும், வானளாவிய அதிகாரம் தங்களுக்கு இருப்பது போலவும் ஜனநாயக படுகொலைகளை நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கவர்னரோ இன்று வரை தனி ராஜாங்கம் செய்வதிலே குறியாக இருக்கிறார்.
கவர்னருக்கு கடிவாளம் போட திராவிட மாடல் அரசு சட்ட போராட்டம் நடத்தி அதில் வெற்றியும் பெற்றுள்ளது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசே அதிகாரம்மிக்கது என்கிற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பானது, இன்று தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் நம்பிக்கையை ஊட்டுகிறது. இந்தியாவின் முதல் செம்மொழி என்கிற அந்தஸ்தை பெற்றுள்ள தமிழ்மொழிக்கு ஒன்றிய அரசு அளிக்கும் நிதி மிக குறைந்ததாகும். ஆனால் சமஸ்கிருத ெமாழிக்கு ஆயிரக்கணக்கான கோடிகளை ஒன்றிய அரசு அள்ளிக் கொடுக்கிறது. இந்தி அல்லாத மாநிலங்களில் தேசிய கல்வி கொள்கையை காரணம் காட்டி இந்தி மொழியை திணிக்க ஒன்றிய அரசு துடிக்கிறது. சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கிடைக்கும் கல்வியை பறிக்கிற வகையில், குலக்கல்வி முறையை மீண்டும் கொண்டுவர துடிக்கின்றனர். தமிழின் தொன்மை மற்றும் பண்பாட்டையுமே ஒன்றிய அரசு ஏற்றுக் கொள்வதாக இல்லை. தமிழர் பண்பாட்டு அடையாளமான கீழடி அகழாய்வு முடிவுகளை ஒன்றிய அரசு இன்னமும் வெளியிட மறுத்து வருகிறது.
இத்தனை போராட்டங்களுக்கு மத்தியிலும், தமிழ்நாட்டை காக்கவும், தமிழ் மொழியை காக்கவும், நம் உரிமைகளை காக்கவும் திராவிட மாடல் அரசு உறுதியான, தெளிவான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. தமிழ்நாட்டை ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு அதிமுக போன்று அடிமை சாசனம் எழுதிக் கொடுத்திடாமல், ஒவ்வொரு உரிமைக்கும் கதவை தட்டுவதோடு, திறக்காத கதவுகளை உடைக்கவும் நெஞ்சுரத்தோடு பேராாடுகிறது திமுக அரசு. கலைஞர் கட்டமைத்த வழித்தடத்தில் நடக்கும் இந்த அரசுக்கு தடைகற்கள் கூட நிச்சயம் படிக்கட்டுகளாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.