Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வி.எம். கிருஷ்ணசுப்பிரமணியனுக்கு பணி பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார் மின் வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன்

சென்னை: தமிழ்நாடு மின் பகிர்மானக் கழக மேனாள் புகைப்படக் கலைஞர் வி.எம். கிருஷ்ணசுப்பிரமணியனுக்கு மின் வாரிய தலைவர் ஜெ. ராதாகிருஷ்ணன், பணி பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். தமிழ்நாடு மின்சார வாரியம் தனது அதிகாரப்பூர்வ புகைப்படக் கலைஞராக 1966 முதல் 2002 வரை அசாதாரண அர்ப்பணிப்புடன் பணியாற்றிய வி.எம். கிருஷ்ணசுப்பிரமணியனின் அயராத பணியினை பாராட்டி சிறப்பாக கௌரவித்தது. ஓய்வு பெற்ற பிறகும் கடந்த 58 ஆண்டுகளுக்கும் மேலாக, அவர் அதே உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் மின்சாரத் துறையின் முக்கிய தருணங்களை பதிவு செய்து வருகிறார். தற்போதும் மின்விசை நிதிக் கழகம் ( Power Finance Corporation) மற்றும் ஊரக மின்மயமாக்கல் கழகத்திற்கு (Rural Electrification Corporation) உரிமம் பெற்ற புகைப்பட சேவைகளை மேற்கொண்டுவருகிறார்.

இவரது சேவைகளைப் பாராட்டி, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பொன்விழா கொண்டாட்டங்களில் "புகைப்படக் கலைக்கான தங்கப் பதக்கமும், ரூ. 10.000/- ரொக்க விருதும்” பெற்றுள்ளார். 2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு புகைப்படக் கலைஞர்கள் மற்றும் வீடியோகிராஃபர்கள் நலச் சங்கத்தால் இவருக்கு “மார்க்கண்டேய விருது” வழங்கப்பட்டுள்ளது. இவரது பணிக்காலத்தில் பெரிய மின் திட்டங்கள், கொண்டாட்டங்கள், அதிகாரப்பூர்வ நிகழ்வுகள், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், பொது சேவை பிரச்சாரங்கள், விளையாட்டு போட்டிகள், இரத்த தான முகாம்கள் என தமிழ்நாடு மின்சார வாரியத்தின் வரலாற்றுப் பயணத்தில் ஒவ்வொரு மைல்கல்லையும் அவர் மிகுந்த அக்கறையுடன் ஆவணப்படுத்தியுள்ளார். தனிப்பட்ட செலவிலும், அசைக்க முடியாத உழைப்புடனும் தமிழ்நாட்டின் மின்சாரத் துறையின் வரலாறையும் வளர்ச்சியையும் எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாத்து வருவது அவரது சிறப்பாகும்.

அவரது ஓய்வறியாத பணி, முன்னாள் முதலமைச்சர்கள், நீதிபதிகள், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பிரமுகர்களிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

இந்நிகழ்வில், தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஜெ. ராதாகிருஷ்ணன், ஐ.ஏ.எஸ்., “கிருஷ்ணசுப்பிரமணியன் அவர்களின் பங்களிப்பு எங்கள் நிறுவனத்தின் வரலாற்றுப் பதிவுகளை மட்டுமல்லாது, அதன் பாரம்பரியத்தையும் எதிர்காலத்திற்காக பாதுகாத்துள்ளது. அவருக்கு நல்ல ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் என்றும் நிலைக்கட்டும்” என வாழ்த்தினார்.