Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வி.கே.பாண்டியன் மீது மறைமுக தாக்கு; பட்நாயக் உடல் நிலை திடீரென மோசமடைந்ததில் சதி உள்ளதா?.. ஒடிசாவில் பிரதமர் மோடி பரபரப்பு

பரிபாடா: ‘நவீன் பட்நாயக் உடல் நிலை திடீரென மோசமடைந்ததன் பின்னணியில் சதி உள்ளதா என ஆராய குழு அமைக்கப்படும்’ என தமிழர் வி.கே.பாண்டியனை மறைமுக குறிவைத்து பிரதமர் மோடிய பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒடிசாவில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து சட்டப்பேரவை தேர்தலும் நடந்து வருகிறது. இங்கு ஆளும் பிஜூ ஜனதா தளத்தை எதிர்த்து பாஜ போட்டியிடுகிறது. அம்மாநில தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு நெருக்கமானவரும் தமிழகத்தை சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான வி.கே.பாண்டியனை குறிவைத்து பாஜ தலைவர்கள் குற்றச்சாட்டு சுமத்துகின்றனர்.

பூரி ஜெகன்நாதர் ஆலயத்தின் பொக்கிஷ அறை சாவி தமிழ்நாட்டில் இருப்பதாக பிரதமர் மோடி பேசியது கடும் சர்ச்சையானது. இந்நிலையில், பரிபாடாவில் நேற்று பிரசாரம் செய்த பிரதமர் மோடி, ‘‘ஒன்றியத்தில் தொடர்ந்து 3வது முறையாக முழு பெரும்பான்மையுடன் பாஜ ஆட்சி அமையும். ஒடிசாவில் 25 ஆண்டுகால பிஜூ ஜனதா தள ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் முடிவு செய்துள்ளனர். இங்கு பாஜ ஆட்சிக்கு வந்தால், முதல்வர் நவீன் பட்நாயக்கின் உடல் நிலை திடீரென மோசடைந்ததன் பின்னணியில் சதி உள்ளதா என்பதை கண்டறிய குழு அமைக்கப்படும்’’ என்றார்.

முன்னதாக, அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா டிவிட்டரில் ஒரு வீடியோவை பகிர்ந்தார். அதில், நவீன் பட்நாயக் மேடையில் பேசும் போது அவரது கை நடுங்குகிறது. அவரது அருகில் மைக்கை பிடித்தபடி நின்றிருக்கும் வி.கே.பாண்டியன், பட்நாயக்கின் கையை பிடித்து இழுத்து மறைக்கிறார். இது குறித்து ஹிமந்தா, ‘‘இது மிகவும் வேதனை தருகிறது. பட்நாயக்கின் கை அசைவுகளை கூட பாண்டியன் கட்டுப்படுத்துகிறார்’’ என கூறியிருந்தார்.

10 ஆண்டாக வதந்தி பரப்பும் பாஜ: நவீன் பட்நாயக் பதிலடி

நவீன் பட்நாயக் நேற்று வெளியிட்ட வீடியோ செய்தியில், ‘‘எனது கையை வைத்து, பிரச்னையே இல்லாத ஒரு விஷயத்தை பாஜ பிரச்னையாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த வேலையெல்லாம் இங்கு நடக்காது. என் உடல் நிலை குறித்து கடந்த 10 ஆண்டுகளாக பாஜ வதந்தி பரப்பி வருகிறது. என்னுடைய உடல் நிலை பற்றி பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளது தவறு. என்னுடைய உடல் நிலை குறித்து தெரிந்து கொள்ள விரும்பினால், பிரதமர் மோடி என்னை போனில் தொடர்பு கொண்டிருக்கலாம். நான் நன்றாக இருக்கிறேன் என்று பிரதமருக்கு தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஒரு மாதமாக ஒடிசா மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்துள்ளேன்’’ என கூறி உள்ளார்.