சென்னை: விஐடி சென்னையில் `டெக்னோ விஐடி 2025’ என்ற சர்வதேச தொழில்நுட்ப விழாவின் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. விழாவுக்கு விஐடி துணை தலைவர் ஜி.வி.செல்வம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சென்னையில் உள்ள தாய்லாந்து துணை தூதரகத்தின் துணை தூதர் ரச்சா அரிபர்க் பேசியதாவது: உலகம் முழுவதும், டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மூலம் ஒரு பிளவு உள்ளது. இதனால் இளைஞர்களுக்கும், முதியவர்களுக்கும் இடையிலான அறிவு சார்ந்த இடைவெளி இருக்கிறது.
முதியவர்களுடன் இளைஞர்கள் சிறிது நேரம் செலவிடுங்கள், இல்லையெனில் அவர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியாமல் பின் தங்கிவிடுவார்கள் என்றார். கவுரவ விருந்தினராக கலந்துகொண்ட எச்.சி.எல். டெக் நிர்வாக துணை தலைவர் பிரின்ஸ் ஜெயகுமார் பேசும்போது, ‘‘செயற்கை நுண்ணறிவு மற்றும் குவாண்டம் கணினி போன்ற துறைகளின் வளர்ச்சியில் அதிக வேகம் ஏற்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இந்தியா உலகின் தகவல் தொழில்நுட்ப சேவை துறையில் தலைநகரமாக திகழ்ந்து வருகிறது’’ என்றார்.
விஐடி துணை தலைவர் ஜி.வி.செல்வம் பேசியதாவது: அமெரிக்காவின் புதிய கொள்கை மாற்றங்கள் காரணமாக, இந்திய மாணவர்கள் அமெரிக்காவுக்கு சென்று படிக்கும் வாய்ப்புகள் குறைந்துள்ளன. உயர்கல்வி பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 44 சதவீதம் குறைந்துள்ளது. இதன் காரணமாக, மாணவர்கள் இந்தியாவிலேயே கல்வி பயின்று இந்தியாவிலேயே உற்பத்தியை மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
கொரோனா காலகட்டத்தில், இறக்குமதியை சார்ந்து இல்லாமல், நாமே சொந்தமாக உற்பத்தி செய்தி நிலைமையை சமாளித்தோம். இந்தியக் கல்வி ஆராய்ச்சி சார்ந்ததாக இருக்கிறது. மாணவர்களுக்கு மத்தியில் தொழில்நுட்ப பரிமாற்றம் அவசியம். டெக்னோ விஐடி 2025 போன்ற நிகழ்வுகள் தலைமைப் பண்புகளை மேம்படுத்த ஒரு சிறந்த வாய்ப்பாகும். இது போன்ற நிகழ்வுகளை மாணவர்கள் கல்விக்கு அப்பாற்பட்டு தங்கள் தலைமைப் பண்புகளை மேம்படுத்த பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என்றார்.
இந்த தொழில்நுட்ப விழாவில், ரோபோ ஷோ, ட்ரோன் ஷோ உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட தொழில்நுட்பம் சார்ந்த நிகழ்வுகள் நடத்தப்படுகிறது. இவற்றில், வெற்றி பெறுபவர்களுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.10 லட்சம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இதில், நாடு முழுவதிலும் இருந்து முன்னணி கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள், ஆஸ்திரேலியா, பிரேசில், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், மலேசியா, உஸ்பெகிஸ்தான், போலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் 1000க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்கின்றனர். `டெக்னோ விஐடி 2025’ நாளை(2ம்தேதி) மாலையுடன் நிறைவடைகிறது.
