Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் தொழில் வளர்ச்சி கருத்தரங்கம்

சென்னை: வி.ஐ.டி. சென்னை பல்கலைக்கழகத்தில் தொழில் வளர்ச்சி குறித்து கருத்தரங்கம் நேற்று தொடங்கப்பட்டது.  விஐடி சென்னையின் 15வது ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக நிலையான உற்பத்தி மற்றும் ஒரு வளமான எதிர்காலத்திற்கான ஆட்டோமேஷன் என்ற தலைப்பிலான தொழில் வளர்ச்சி குறித்து 2 நாள் கருத்தரங்கம் நேற்று தொடங்கியது. இந்த கருத்தரங்கில் விஐடி சென்னையின் இணை துணை வேந்தர் டி.தியாகராஜன், பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாறி கொண்டார்.

இந்த, புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் முலம், ரோபாட்டிக்ஸ், ஆட்டோமேஷன் மற்றும் நெட்வொர்க் பாதுகாப்பு ஆகியவற்றில் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பது, புதிய தயாரிப்புகளை உருவாக்குதல் மற்றும் மேம்படுத்துதல் உள்ளிட்டவை நோக்கமாக கொண்டு செயல்படுத்தப்பட உள்ளது. தனியார் நிறுவனத்துடன் விஐடி சென்னையின் கண்டு பிடிப்பான நீர் தர மதிப்பீட்டு தொழில்நுட்பத்தினை சந்தைப்படுத்துவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. நிகழ்ச்சியில், மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

இதனை, தொழில்துறையினர் கண்டு அவற்றை பற்றி கேட்டறிந்து மாணவர்களை பாராட்டினர். முன்னதாக, நடந்த தொடக்க நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர் உலகளாவிய தானியங்கி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் டாக்டர் ராமதாஸ் பேசுகையில், `முன்பு, இந்தியாவில் உள்ளவர்களுக்காக நாம் பொருட்களை தயாரித்து வந்தோம். இப்போது நாம் உலகத்துக்காகவும் தயாரித்து வருகிறோம்.

எனவே, இந்தியாவில் தயாரிக்கும் பொருட்கள் உலகின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சர்வதேச தரத்தில் இருக்க வேண்டும். தற்போது நாம் சந்திக்கும் பல சவால்களுக்கு தீர்வாக கல்வித்துறையும் தொழில்துறையும் இணைந்து செயல்பட வேண்டும்’ என்றார்.

எப்சன் இந்தியா பிரைவேட் லிமிடெட்டின் தலைவர் சம்பா மூர்த்தி, மகிந்திரா மற்றும் மகிந்திரா நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவின் துணை தலைவர் சங்கர் வேணுகோபால், எப்லான் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் உமேஷ் பாய், புஜி எலக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமை வணிக அலுவலர் பழனிசாமி லட்சுமணன், சென்னை சேப்டர் தலைவர் கலைசெல்வன் ஆகியோர் கவுரவ விருந்தினர்களாக பங்கேற்று உரையாற்றினர். விழாவில், விஐடி துணை வேந்தர் வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன், விஐடி சென்னையின் இயக்குநர் சத்திய நாராயணன், கூடுதல் பதிவாளர் முனைவர் பி.கே.மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.