விருதுநகர்: வடகிழக்கு பருவமழையால் விருதுநகர் பகுதியில் அதலைக்காய் விளைச்சல் அமோகமாக உள்ளது. கிலோ ரூ.250 வரை விற்பனை செய்யப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் பெரும்பான்மையான விளைநிலங்கள் கரிசல் மண் கொண்டவை. வானம் பார்த்த பூமியான இந்த கரிசல் பூமியில் மழை காலங்களில் பருத்தி, மக்காச்சோளம், நிலக்கடலை, கம்பு, பாசிப்பயிறு, துவரை, கேழ்வரகு ஆகியவை சாகுபடி செய்யப்படுகின்றன. மழை காலங்களில் இயற்கையாகவே கீரைகள், உணவுக் காளான்கள், அதலைக்காய் ஆகியவை தரிசு நிலங்களில் வளரும். இவைகளை பெண்கள் பறித்து சமைத்தது போக, மீதியை சந்தையில் விற்பனை செய்வது வழக்கம்.
இந்நிலையில், தற்போது வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், இந்த மண்ணில் அரிதாக விளையக்கூடிய அதலைக்காய் வயல்வெளிகளில் விளைந்து காணப்படுகிறது. மருத்துவ குணம் கொண்ட இந்த அதலைக்காய் சர்க்கரை, ரத்த அழுத்தம் ஆகியவற்றை குணப்படுத்தும் தன்மையுடையவை. இதை பறிக்கும் பொதுமக்கள் விருதுநகர், சாத்தூர், சிவகாசி, அருப்புக்கோட்டை சந்தைகளில் விற்பனை செய்கின்றனர். கொள்முதல் செய்யும் வியாபாரிகள் கிலோ ரூ.250 வரை விற்கின்றனர். சீசனுக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய காய் என்பதால் விலையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர்.


