விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள எருமனூர் கிராமத்தில் கோயில் திருவிழா காரணமாக நேற்றுமுன்தினம் இரவு தெருக்கூத்து நடந்தது. இதை காண இதே கிராமத்தை சேர்ந்த பாபு மகன் ஆதினேஷ் (21), வீரபாண்டியன் மகன் ஐயப்பன் (19), மணி மகன் வேல்முருகன் (21), கண்ணன் மகன்கள் பள்ளி வேன் ஓட்டுனர் வெங்கடேசன் (25), கவுதம் (20), பச்சமுத்து மகன் நடராஜன் (21) ஆகிய 6 பேரும் வந்துள்ளனர்.
நள்ளிரவு ஒரு மணி அளவில் ஒரு காரில் 6 பேரும், சித்தலூர் பைபாஸ் சாலையில் உள்ள கடையில் டீ குடிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது சித்தலூர் புறவழிச்சாலையில் சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை அருகிலுள்ள ஒரு மரத்தில் மோதி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், ஆதினேஷ், ஐயப்பன், வேல்முருகன் ஆகிய 3 பேரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
வெங்கடேசன், கவுதம், நடராஜன் ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் படுகாயமடைந்த 3 பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.