Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விராலிமலை முருகன் கோயிலில் இன்று சூரசம்ஹாரம்

*சிறப்பு பஸ்கள் இயக்கம் பலத்த போலீஸ் பாதுகாப்பு

விராலிமலை : விராலிமலை முருகன் கோயில் அடிவாரத்தில் இன்று மாலை 6 மணியளவில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இதில் பல்லாயிரக்கணக்காண பக்தர்கள் திரள்வார்கள் என்பதால் நூற்றுக்கணக்கான போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

விராலிமலையில் உள்ள முருகன் மலைக்கோயில் சிறப்பு பெற்ற தலமாகும். 207 படிகள் கொண்ட இந்த மலைக்கோயிலில் முருகன் ஆறுமுகங்களுடன் வள்ளி,தேவசேனா சமேதராக மயில் மேல் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.

பல்வேறு சிறப்பு பெற்ற இம்மலை கோயில் மேலே செல்வதற்கு படிகள் மட்டுமல்லாது யானையடி பாதை(சாய்வு தளம்), வாகனங்கள் சென்று வர தார் சாலையும் உள்ளது என்பது இக்கோயிலுக்கு மேலும் சிறப்பாகும். இந்நிலையில் பல்வேறு விழாக்களில் கந்தசஷ்டி விழாவும் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மழையின் காரணமாக கடந்த வருடம் சம்பிரதாய விழாவாக நடத்தப்பட்ட கந்தசஷ்டி விழாவை நிகழாண்டு வெகுவிமர்சையாக கொண்டாட கோயில் நிர்வாகம் மற்றும் மண்டகபடிதாரர்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டு கடந்த 22ம் தேதி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டு, காப்பு கட்டுதலுடன் கொடி ஏற்றப்பட்டு விழா தொடங்கியது.

விழாவின் 4ம் நாளான நேற்று முன்தினம் வீரபாகு முருகனிடம் ஆசிபெற்று கஜமுக சூரனை சம்ஹாரம் செய்திடும் நிகழ்வும் நேற்று சிங்க மஹா சூரன் வடிவில் வந்த சூரபத்மனை முருகன் வதம் செய்யும் நிகழ்வும் மலைக்கோயில் அடிவாரத்தில் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை கோயில் அடிவாரம் கீழ ரத வீதியில் நடைபெறுகிறது. பல்லாயிரக்கணக்காண பக்தர்கள் சூரனை வதம் செய்யும் நிகழ்வை காண உள்ள நிலையில் பக்தர்கள் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துதுறை சார்பில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.