80ஸ் ரீயூனியன்!
80களில் தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகர், நடிகைகள் ஓரிடத்தில் சந்தித்து தங்களது நினைவுகளை பகிர்ந்துகொள்ளும் நிகழ்வு ஒவ்வொரு வருடமும் நிகழும். 80களில் தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகர், நடிகைகள் ஆண்டுதோறும் ஒரு இடத்தை தேர்வு செய்து அங்கு சந்தித்து கொள்வதை (reunion) வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும் அந்த சந்திப்பின் போது ஒரே நிற ஆடையில் கலந்து கொள்வதும் வழக்கம். மேலும் சந்திப்பின்போது, பழைய நினைவுகளைப் பகிர்ந்து மகிழ்வது வழக்கம். இந்நிலையில் 3 ஆண்டுகளுக்கு பின், சென்னையில் நேற்று 80களில் பிரபலமான நட்சத்திரங்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த முறை புலி போன்ற டிசைன்களில் உருவாக்கப்பட்ட உடையில் அனைத்து நடிகர், நடிகைகளும் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில், நடிகர் பாக்யராஜ், பிரபு, சிரஞ்சீவி, வெங்கடேஷ், சரத்குமார், சுகாசினி, மீனா, குஷ்பூ, நதியா, ரேவதி, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த முறை ‘’Wild” உடைகள் தீம் கொடுக்கப்பட்டதால் அனைவரும் வன விலங்குகளின் தோல் , உருவங்கள் அச்சிடப்பட்ட உடைகள் என அணிந்து வந்து கலக்கினர். இவர்களின் மகிழ்ச்சியான தருணங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
மாஸ் காட்டிய இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி!
மகளிர் உலகக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றிபெற்றது. 13வது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்துவருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இந்த நிலையில் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் அரங்கேறிய 6வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொண்டது. இதில் ‘டாஸ்’ ஜெயித்த பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதன்படி ஸ்மிர்தி மந்தனாவும், பிரதிகா ராவலும் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்து ஓரளவு நல்ல தொடக்கம் தந்தனர். இந்த போட்டியில், இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு 247 ரன்கள் எடுத்தது.பாகிஸ்தான் அணி 43 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதில், இந்தியா 4 புள்ளிகளை பெற்று புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. பட்டியலில் ஆஸ்திரேலியா 2ஆம் இடத்தில் (3 புள்ளிகள்) உள்ளது. இதற்கு முந்தைய வாரம் தான் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றினர். வாழ்த்துகள் கேர்ள்ஸ்.