Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

9 நாட்கள் நடக்கும் பிரம்மோற்சவத்தில் மூத்த குடிமக்கள், விஐபி தரிசனம் ரத்து: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: திருமலை ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி அன்னமய்யா பவனில் மாவட்ட நிர்வாகம், திருப்பதி மாநகராட்சி, போலீசார் மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுடன் செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் தலைமையில் ஒருங்கிணைப்பு கூட்டம் நேற்று நடத்தது. கூட்டத்திற்கு பிறகு செயல் அதிகாரி, நிருபர்களிடம் கூறியதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் வரும் 24ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று முதல்வர் சந்திரபாபுநாயுடு மாநில அரசு சார்பில் பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க உள்ளார். பிரம்மோற்சவத்தின் போது தினமும் காலை 8 மணி முதல் 10 மணி வரையும், இரவு 7 மணி முதல் 9 மணி வரையும் சுவாமி வீதி உலா பல்வேறு வாகனங்களில் நடைபெறும். 28ம்தேதி மாலை 6.30 மணிக்கு கருட வாகன சேவை தொடங்கும். பிரம்மோற்சவம் நடைபெறும் 9 நாட்கள் அலங்காரத்திற்கு 60 மெட்ரிக் டன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.

இதற்காக ரூ.3.50 கோடி மலர்களை நன்கொடையாளர்கள் வழங்கி உள்ளனர். அறைகள் ஆன்லைனில் வழங்கும் கோட்டா குறைக்கப்பட்டு நேரடியாக திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக சிபாரிசு கடிதங்களின் மூலம் வழங்கப்படும் அறைகள் ஒதுக்கீடு 9நாட்கள் இருக்காது. கடந்த ஆண்டு 9 நாட்களுக்கு ஒரு லட்சம் ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் ஆன்லைனில் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு 1.16 லட்சம் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளது. கருட சேவையை தவிர்த்து மற்ற நாட்களில் கடந்த ஆண்டு ஒரு நாளைக்கு 13 ஆயிரம் இலவச சர்வதரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு 25 ஆயிரம் இலவச சர்வ தரிசன டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது. பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க 8 லட்சம் லட்டுகள் இருப்பு வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தலைமுடி காணிக்கை செலுத்த நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க 1,350 சவரத்தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 2 ஆயிரம் பக்தர்கள் தங்குவதற்காக புதிதாக கட்டப்பட்ட யாத்திரிகள் சமுதாயக்கூடம் (பிஎஸ்சி 5) வெங்கடாத்திரி நிலையத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு 25ம்தேதி திறந்து வைக்க உள்ளார். தரிகெண்ட வெங்கமாம்பா அன்னப்பிரசாத கூடத்தில் காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை இடைவெளி இல்லாமல் தொடர்ந்து அன்னப்பிரசாதம் வழங்கப்படும். பிரம்மோற்சவம் நடைபெறும் நாட்களில் அங்கப்பிரதட்சணம், ஒரு வயது குழந்தையுடன் பெற்றோர், மூத்த குடிமக்கள், விஐபி தரிசனம் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ரூ.4.04 கோடி காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 71,249 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 22,901 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ரூ.4.04 கோடி காணிக்கை செலுத்தியுள்ளனர். இன்று காலை வைகுண்டம் கியூ காம்பளக்சில் உள்ள 31 அறைகளில் தங்கியுள்ள பக்தர்கள் தரிசனம் செய்ய சுமார் 18 மணி நேரமாகும் என தெரிகிறது. நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்றவர்கள் 5 மணி நேரத்திலும் ரூ.300 டிக்கெட் பெற்றவர்கள் 3 மணி நேரத்திலும் தரிசனம் செய்தனர்.