விஐபி தரிசனங்களை அனுமதிப்பதால் திருச்செந்தூரில் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டுமா? : ஐகோர்ட் கேள்வி
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் தரிசனம் செய்ய என்ன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கோயில் நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. திருச்செந்தூர் கோயிலுக்கு வரும் மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் நிலையில் விஐபி பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதனால் விஐபி பக்தர்கள் செல்லும் போது சாதாரண பக்தர்கள் மேலும் மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. இதன் எதிரொலியாக விஐபி தரிசனம் குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, "திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் தரிசனம் செய்ய என்ன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விஐபி/விவிஐபி தரிசனங்களை அனுமதிப்பதால் பொது பக்தர்கள் வரிசையில் காத்திருக்க வேண்டுமா?. விஐபி/விவிஐபி தரிசனத்துக்கு தனி நேரம் ஒதுக்க கோயில் நிர்வாகம் விரும்புகிறதா?.விஐபி தரிசனத்தின்போது, பக்தர்களை காத்திருக்க வைக்காமல் இருக்க மாற்று ஏற்பாடு செய்ய முடியுமா? என கேள்வி எழுப்பிய நீதிபதி, கோயில் இணை ஆணையர் பதில் மனுதாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.