Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வன்முறையை தூண்டும் வகையில் எக்ஸ் தள பதிவு ஆதவ் அர்ஜூனா வழக்கின் தீர்ப்பு உயர் நீதிமன்றத்தில் தள்ளிவைப்பு

சென்னை: கரூர் துயர சம்பவத்தில் 41 பேர் பலியான நிலையில் தவெக நிர்வாகிகளை காவல்துறை கைது செய்தது. இந்நிலையில் தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா எக்ஸ் தளத்தில் வன்முறையை தூண்டும் வகையில் பதிவிட்டிருந்தார். இதுதொடர்பாக, சைபர் குற்றப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் தனக்கு எதிராக பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய கோரி ஆதவ் அர்ஜூனா ஐகோர்ட்டில் மனு செய்திருந்தார். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, காவல் துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, கரூரில் பெரிய சோகம் நிகழ்ந்த நிலையில், அதற்கு பொறுப்பேற்காமல் இதுபோன்ற கருத்துக்களை பதிவிட்டது தொடர்பாக வழக்குப்பதிந்ததால் தொடர் நிகழ்வுகள் தடுத்து நிறுத்தப்பட்டன. புகாரில் சந்தேகம் இருந்தால் மட்டுமே ஆரம்பகட்ட விசாரணை நடத்த வேண்டும். புகாரில் முகாந்திரம் இருந்தால் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யலாம்.

வெறுப்பு பேச்சு தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவல்துறை தாமாக முன்வந்து வழக்கை பதியவில்லை. புகார்தாரர் மீது உள்நோக்கம் கற்பிக்க முடியாது. ஆதவ் அர்ஜுனாபதிவை முழுமையாக ஆய்வு செய்த உதவி ஆணையர் உத்தரவின் அடிப்படையிலேயே வழக்குப்பதியப்பட்டது. அதனால் வழக்கை ரத்து செய்யக் கூடாது என்று வாதிட்டார். ஆதவ் அர்ஜுனா தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, தனது பதில் வாதத்தில், எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டது வெறுப்பு பேச்சு வரம்பில் வராது. எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, 18 மணி நேரம் கழித்து தான் எப்ஐஆர் பதியப்பட்டது. இடையே எந்த சம்பவங்களும் நடக்கவில்லை. சர்ச்சை ஏதும் வந்து விடக் கூடாது என்பதற்காகவே பதிவை நீக்கினார் என்று வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததையடுத்து, ஆதவ் அர்ஜுனா மனு மீதான தீர்ப்பை நீதிபதி ஜெகதீஷ் சந்திரா தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.