‘வன்முறையில் ஈடுபட்டு புரட்சியை உண்டாக்க வேண்டும்’ கலவரத்தை தூண்டும் ஆதவ் அர்ஜுனா: தலைமறைவானவரை கைது செய்ய சென்னை சைபர் க்ரைம் போலீசார் தீவிரம்
சென்னை: வன்முறையில் ஈடுபட்டு புரட்சியை உண்டாக்க வேண்டும் என்று சமூக வலைதளத்தில் கோரிக்கை விடுத்த தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா மீது சென்னை வடக்கு மண்டல சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தவெக தலைவரும் நடிகருமான விஜய் கடந்த சனிக்கிழமை கரூர் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். கூட்டத்திற்கு பகல் 12 மணிக்கு வருவதாக தவெக அதிகாரப்பூர்வ பக்கத்தில் அறிவிப்பு விடுக்கப்பட்டது. இதனால் காலை 10 மணி முதலே கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் அவரது கட்சி தொண்டர்கள் ஒன்று கூடினர்.
அதேநேரம் நடிகர் விஜய் பிரசார இடத்திற்கு இரவு 7.40 மணிக்கு தான் வந்தார். தவெக மனுவில் பிரசார கூட்டத்திற்கு 10 ஆயிரம் பேர் வருவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் 27 ஆயிரம் பேர் ஒன்று கூடினர். மேலும், நடிகர் விஜய்யை அருகில் பார்க்க வேண்டும் என்று தொண்டர்கள் முண்டியடித்தனர். விஜய் கூட்டத்திற்கு வரும்போது அங்கு 25 ஆயிரம் பேர் திரண்டனர். மேலும், அவருடன் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் இரு சக்கர வாகனங்களிலும், கார்களிலும் பின்தொடர்ந்து வந்தனர். இதனால் இரண்டு கூட்டமும் ஒன்று சேர்ந்தன.
இதனால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், இளம்பெண்கள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நெரிசலில் உயிரிழப்பு தகவல் அறிந்த உடனே பிரசார வாகனத்தில் இருந்த நடிகர் விஜய்யிடம் தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பிரிவு பொதுச் செயலராளர் ஆதவ் அர்ஜுனா அவரது காதில் 9 வயது சிறுமி மாயமானதாக கூறினார். அடுத்த சில நொடிகளில் மீண்டும் விஜய்யிடம் சில தகவல்களை கூறினார். அதனை தொடர்ந்து நடிகர் விஜய் அவசர அவசரமாக தனது பிரசாரத்தை முடித்துக்கொண்டு வாகனத்தில் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றனர்.
கரூரில் இருந்து 3 கார்களில் இருந்து மாறி திருச்சி விமானநிலையம் வந்தார். பிறகு திருச்சியில் இருந்து தனி விமானம் மூலம் விஜய் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் சென்னைக்கு வந்துவிட்டனர். இந்நிலையில் ஆதவ் அர்ஜுனா தனது கட்சி நிர்வாகிகளை கலவரத்தில் ஈடுபட தூண்டும் வகையில் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டார். அதில், ‘‘சாலையில் நடந்து சென்றாலே தடியடி... சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டாலே கைது... இப்படி ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளாக காவல்துறை மாறிபோனால் மீட்சிக்கு இளைஞர்களின் புரட்சிதான் ஒரே வழி.
இப்படி இலங்கையிலும், நேபாளத்திலும் இளைஞர்களும், இளைய தலைமுறையும் ஒன்றாய் கூடி, அதிகாரத்திற்கு எதிரான புரட்சியை உருவாக்கிக் காட்டினார்களோ அதேபோல இங்கும் இளைஞர்களின் எழுச்சி நிகழும். அந்த எழுச்சிதான் ஆட்சி மாற்றத்திற்கான அடிதளமாகவும், அரச பயங்கரவாதத்திற்கான முடிவுரையாகவும் இருக்கப்போகிறது. பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்’’ என்று கூறியுள்ளார். இலங்கை, நேபாளம் போல இளைஞர்கள் கலவரத்தில் ஈடுபட வேண்டும் என்று கலவரத்தை தூண்டும் வகையில் ஆதவ் அர்ஜுனா செயல்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தவெக நிர்வாகிகளின் தவறான, புரிதல் இல்லாத, விளையாட்டுத்தனமான பொதுக்கூட்டத்தால் தற்போது 41 உயிர்களை நாம் பலி கொடுத்துள்ேளாம். அதில் இருந்து பாடம் கற்பிக்காமல், தாங்கள் செய்த தவறை உணராமல், இளைஞர்களை சிக்க வகைக்கும் வேலைகளில் ஆதவ் அர்ஜுனா போன்றவர்கள் ஈடுபடுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் தமிழக அரசு இதுபோன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையில், பொதுமக்களிடையே கலகத்தை ஏற்படுத்தி கலவரத்தை தூண்டுவதாக சென்னை வடக்கு சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டது. புகாரின்படி தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மீது 192, 196(1),(பி), 197(1),(டி), 353(1),(பி), 353(2) பிஎன்எஸ் ஆகிய 5 சட்டப்பிரிவிகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சைபர் க்ரைம் போலீசார் ஆதவ் அர்ஜுனாவை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கரூர் விபத்துக்கு பிறகு ஆதவ் அர்ஜுனா தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவரை நவீன தொழில்நுட்ப உதவியுடன் இருப்பிடத்தை அறிந்து கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.