மக்களைப் பற்றி கவலைப்படாமல் வன்முறையை தூண்டி விடும் வகையில் பேசுவது உச்சகட்ட பொறுப்பின்மை: ஒரு கட்சியின் தலைவர், ஆறுதல் கூட சொல்லாமல் போவது இதுவரை பார்த்திடாத ஒன்று -கனிமொழி எம்பி பேட்டி
சென்னை: ஒரு கட்சியின் தலைவர், ஆறுதல் கூட சொல்லாமல் போவது, தன்னுடைய பாதுகாப்பை மட்டும் நினைப்பது, நான் இதுவரை பார்த்திடாத ஒன்று என்று கனிமொழி எம்பி கூறினார். திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று அளித்த பேட்டி: கரூர் துயரச் சம்பவத்தில் பலர் மருத்துவமனையில் போராடிக்கொண்டிருக்கிற சூழலைத்தான் பார்க்கிறோம். எத்தனையோ குடும்பங்களில் தந்தையை இழந்திருக்கிறார்கள், குழந்தைகளை இழந்திருக்கிறார்கள், படித்துவிட்டு நல்ல எதிர்காலம் இருக்கும் என்று நினைத்த அடுத்த தலைமுறையை இழந்திருக்கிறார்கள், அந்த குடும்பங்களில் இருக்கக்கூடிய கண்ணீரும் கதறலும் இன்றைக்கும் மறக்கமுடியாத சூழலைத்தான் பார்க்க முடிகிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வெளியிட்டிருக்கிறார். இது யாரையும் பழி சொல்லக்கூடிய நேரமோ, குற்றம் சொல்லக்கூடிய நேரமோ இல்லை. சமூக வலைதளங்களில் பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும் என்று பெருந்தன்மையோடு பேசியிருக்கிறார். ஒரு கட்சியுடைய தலைவர் அந்த இடத்திலிருந்து ஒரு ஆறுதல் கூட சொல்லாமல் போவது, தன்னுடைய பாதுகாப்பை மட்டும் நினைப்பது, நான் இதுவரை பார்த்திடாத ஒன்று. மக்களைப் பற்றி, அவர்களின் பாதுகாப்பை பற்றித்தான் இப்போது யோசிக்கவேண்டுமே தவிர, இன்னும் பிரச்னையை தூண்டுவது போல, வன்முறையைத் தூண்டுவது போல பேசுவது நிச்சயமாக உச்சக்கட்ட பொறுப்பின்மை.
எந்த ஒரு அரசியல் கட்சியாக இருந்தாலும், சூழ்நிலையை அமைதியாக்குவது முதல் கடமை. எந்த இடத்திலும் வன்முறையைத் தூண்டக்கூடிய வகையில், இன்னும் உயிர்சேதத்தை, உயிர் இழப்புகளை உருவாக்கக்கூடிய பேச்சுகள் தவிர்க்கப்படவேண்டும். அதைத்தான் முதல்வர் மு.க.ஸ்டாலினும் காணொலியில் பேசியிருக்கிறார். யாராக இருந்தாலும் தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்றுதான் நினைப்பார்கள், யாரையும் குற்றம் சொல்லவேண்டிய நேரம் இதுவல்ல என்று சொல்லியிருக்கக்கூடிய வேளையில் மக்களைப் பற்றி கவலைப்படாமல், வன்முறையைத் தூண்டக்கூடிய வகையில் பேசுவது உச்சக்கட்டப் பொறுப்பின்மை. இவ்வாறு அவர் கூறினார்.