Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வாகனங்களுக்கான விதிமீறல் அபராதத்தை செலுத்தினால் மட்டுமே இன்ஸூரன்ஸ் புதுப்பிக்கலாம்: சென்னை மாநகரக் காவல்துறை நடவடிக்கை!

சென்னை: வாகனங்களுக்கான அபராத நிலுவைத் தொகையை செலுத்தினால்தான், இன்சூரன்ஸ் புதுப்பிக்க முடியும் என்ற புதிய நடைமுறையை சென்னை மாநகரக் காவல்துறை கொண்டு வந்துள்ளது. சென்னையில் வாகனங்களின் பெருக்கம் அதிகரித்து வரும் நிலையில், விதிமீறல் சம்பவங்களும் அதிகம் நடக்கின்றன. விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். நேரடி அபராத நடைமுறை மட்டுமின்றி, ஆங்காங்கே அதிநவீன கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியும், விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை கண்காணித்து அபராதம் விதிக்கப்படுகிறது.

அதிக வேகமாக வாகனம் ஓட்டுதல், சிக்னலை மீறுதல், 'ஹெல்மெட்' அணியாமல் செல்வது உள்ளிட்ட விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த அபராத தொகையை ஏராளமான வாகன ஓட்டிகள், அபராதத்தை ஆண்டுக்கணக்கில் செலுத்தாமல் இருக்கின்றனர். இந்த அபராதத் தொகையை வசூலிக்க, ஒவ்வொரு போக்குவரத்து உதவி கமிஷனர் அலுவலகத்திலும் அமைக்கப்பட்டுள்ள, 'கால் சென்டர்' ஊழியர்கள் மூலம் அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது.

ஆனாலும், பலரும் அபராதத் தொகையை செலுத்த முன்வராததால் போக்குவரத்து விதிமீறலுக்காக விதிக்கப்பட்ட அபராத நிலுவை ரூ.300 கோடி வரை செலுத்தப்படாமல் உள்ளதால், நிலுவைத் தொகையை வசூல் செய்யும் பொருட்டு, காப்பீட்டு நிறுவனங்களுடன் சேர்ந்து சென்னை மாநகரக் காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி, இன்சூரன்ஸ் நிறுவன ஆன்லைன் பக்கத்தில், வாகன எண்ணை உள்ளீடு செய்து இன்சூரன்சை புதுப்பிக்க வேண்டும். புதுப்பிக்கும் போது, சம்பந்தப்பட்ட வாகனத்திற்கு அபராத தொகை செலுத்தப்படாமல் இருந்தால், அதை உடனடியாக செலுத்தும் படி அறிவுறுத்தப்படும். நிலுவையில் உள்ள அபராதத் தொகையை செலுத்தினால் மட்டுமே, இன்சூரன்சை புதுப்பிக்க முடியும். நேரடியாக சென்றாலும், ஆன்லைன் மூலம் புதுப்பிக்க முயன்றாலும், அபராதத் தொகையை செலுத்தினால் மட்டுமே இனி இன்சூரன்சை புதுப்பிக்க முடியும்.