விண்ணைத்தாண்டி வருவாயா பட காட்சிகள், இசையை ‘ஆரோமலே’ படத்தில் பயன்படுத்த உயர் நீதிமன்றம் இடைக்கால தடை
சென்னை: ஆர்.எஸ்.இன்போடைன்மென்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்த “விண்ணைத்தாண்டி வருவாயா” படம் 2010ல் வெளியானது. இப்படத்தின் காட்சிகள் மற்றும் பின்னணி இசை சமீபத்தில் வெளியான ‘ஆரோமலே’ படத்தில் பயன்படுத்தியுள்ளனர். இதை எதிர்த்து ஆர்.எஸ். இன்போடையின்மென்ட் சார்பில் டி.ராஜீவ் உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், எங்களது அனுமதி இல்லாமல் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் காட்சிகள் மற்றும் இசையை ஆரோமலே படத்தில் பயன்படுத்தியுள்ளனர். இதை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆர்.எஸ்.இன்போடைன்மென்ட் நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் ரமேஷ் கணபதி ஆஜராகி, தங்கள் நிறுவனம் தயாரித்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் காட்சிகள் மற்றும் இசையை பயன்படுத்துவது காப்புரிமை சட்டத்திற்கு முரணானது. எனவே, அவற்றை பயன்படுத்துவதற்கு மினி ஸ்டூடியோ நிறுவனத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, காப்புரிமை சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளதால் “விண்ணைத்தாண்டி வருவாயா” படத்தின் காட்சிகள், இசை ஆகியவற்றை “ஆரோமலே” படத்தில் பயன்படுத்தக் கூடாது என்று இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.


