Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

விழுப்புரத்தை தொடர்ந்து நெய்வேலியில் இணை சார்-பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்டு

நெய்வேலி: விழுப்புரம் இணை சார்-பதிவாளர் அலுவலகத்தில் நேற்றிரவு லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி ரூ.1.80 லட்சத்தை பறிமுதல் செய்த நிலையில் இன்று காலை நெய்வேலியில் உள்ள சார்-பதிவாளர் வீட்டில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் திரு.வி.க சாலையில் இணை சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. விழுப்புரம் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்கள், நகரப் பகுதியில் உள்ள பத்திர பதிவுகள் இங்கு நடைபெறும். குறைந்தபட்சம் நாள் ஒன்றுக்கு 50 பத்திரப்பதிவுகள் நடைபெறும். இந்நிலையில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் அரசு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக பணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக விழுப்புரம், கடலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அமுதா லஞ்ச ஒழிப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்து, திடீர் சோதனை நடத்த அறிவுறுத்தியிருந்தார்.

அதன்படி லஞ்ச ஒழிப்பு போலீசார் மேற்கண்ட இணை சார்-பதிவாளர் அலுவலகத்தை கடந்த ஒருவாரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு 8.10 மணி அளவில் டிஎஸ்பி சத்யராஜ் தலைமையிலான 10 பேர் கொண்ட போலீசார் திடீரென்று அலுவலகத்தில் புகுந்து முன்பக்க கதவுகளை மூடி சோதனையில் ஈடுபட்டனர். காலை முதல் எத்தனை பத்திர பதிவுகள் நடைபெற்றன. அதற்கான கட்டணங்கள் குறித்து கணக்கு வரவுகளை சேகரித்தனர். தொடர்ந்து 2 மணி நேர சோதனைக்கு பிறகு கணக்கில் வராத ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் பணம் கைப்பற்றப்பட்டது. இதுகுறித்து இணை சார்பதிவாளர் தையல்நாயகி மற்றும் அங்கிருந்த அலுவலக பணியாளர்களிடம் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணை 10.30 மணி வரை நீடித்தது. மேலும் இணை சார்-பதிவாளர் தையல்நாயகி, ஊழியர்கள் உள்பட 8 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த வடக்குத்து ஊராட்சி அசோக் நகரில் உள்ள இணை சார்-பதிவாளர் தையல்நாயகியின் வீட்டில் இன்று காலை கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் திருவேங்கடம் தலைமையில் சுமார் 7 பேர் கொண்ட குழுவினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சோதனையில் முக்கிய ஆவணங்கள், சொத்து பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.