Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

விழுப்புரத்தில் 50 ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்: போலீஸ் குவிப்பால் பரபரப்பு

விழுப்புரம்: விழுப்புரம் பவர் ஹவுஸ் பகுதியில் நீதிமன்ற உத்தரவின்படி 50 ஆக்கிரமிப்பு வீடுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் இன்று பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட பவர் ஹவுஸ் சாலையில் ரயில்வே இடத்திற்கு சொந்தமான இடத்தில் 75 ஆண்டுகளுக்கு மேலாக பலர் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர்.

இதே பகுதியில் வனஸ்பதி தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வரும் தொழிலதிபர், ‘ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2024ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, சாலையின் நடுவே உள்ள கோயில் மற்றும் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள 50 வீடுகளை அகற்ற மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து கடந்த மார்ச் 30ம்தேதி மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் பொக்லைன் இயந்திரத்துடன் இந்த கோயிலை இடிக்க வந்தனர். போலீசாரும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஒரு வாரம் காலக்கெடு கேட்டனர். இதையடுத்து அதிகாரிகள் திரும்பி சென்றனர். ஒரு வாரம் முடிந்த நிலையில் கடந்த ஏப்ரல் 11ம் தேதி சாலையில் நடுவில் இருந்த முத்துமாரியம்மன் கோயில் அகற்றப்பட்டது.

தொடர்ந்து அதே சாலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 50 வீடுகளை காலி செய்ய வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களுக்கு மாற்று இடமும் வழங்கப்பட்டு, அப்பகுதியில் வீடு கட்டி தருவது வரை கால அவகாசம் கொடுக்கிறோம் என்றும் தெரிவித்ததாக தெரிகிறது. ஆனால் பட்டா வழங்கிய மாவட்ட நிர்வாகம், இதுவரை ஒருவருக்குகூட வீடு கட்டி தரவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை 6 மணியளவில் நகராட்சி ஆணையர் வசந்தி, ஏடிஎஸ்பி தினகரன், ஏஎஸ்பி ரவீந்திரகுமார் குப்தா ஆகியோர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார், 100 ரயில்வே போலீசார், தீயணைப்பு வாகனம், பொக்லைன் இயந்திரம், கிரேன் இயந்திரம் ஆகியவற்றுடன் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

பின்னர் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள வீடுகளை இடித்து அகற்றும் பணியை தொடங்கினர். இந்த பணியை விழுப்புரம் தாசில்தார் கனிமொழி பார்வையிட்டார். வீடுகள் இடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்த உரிமையாளர்கள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெண்கள் கதறி அழுதனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.