*ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு
விழுப்புரம் : விழுப்புரம் அருகே போலி பத்திரப்பதிவை ரத்து செய்யக்கோரி வாலிபர், ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் அருகே வளவனூரை சேர்ந்தவர் ஜெயக்குமார்.
நேற்று தனது கோரிக்கையை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார், அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஆட்சியரிடம் மனு அளிக்குமாறு கூறினர்.
இதனை தொடர்ந்து அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, எனது குடும்ப சொத்து குமாரகுப்பத்தில் தந்தை பெயரில் உள்ளது. எனது தாத்தா, தானசெட்டில்மெண்ட் செய்து வைத்தார். இந்நிலையில் பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர் போலி பட்டாவை வைத்து அவரது பெயருக்கு பத்திரம் பதிவு செய்துள்ளார். மூலபத்திரம் அனைத்தும் என்னிடம் உள்ள நிலையில் போலியான பட்டாவை கொண்டு பத்திரப்பதிவு செய்து கொண்டுள்ளார்.
போலி பட்டாவை வைத்து முறைகேடாக பத்திரம் பதிவு செய்துள்ளனர். எனது தாத்தா இந்த இடத்தை கிரையம் செய்ததற்கான பத்திரம் உள்ளது. இதுகுறித்து உண்மை தன்மையை ஆய்வு செய்து போலி பத்திரப்பதிவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.