*துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்
விழுப்புரம் : விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்கள் அளித்த 603 மனுக்கள் மீது துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று மனுதாரர்கள் முன்னிலையில் விசாரணை மேற்கொண்டு தொடர்புடைய அலுவலர்கள் மனுக்கள் மீது உரிய தீர்வு வழங்கிட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
நேற்று நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து சுமார் 603 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. அதில் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டு மனைப்பட்டா கோருதல், ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், கலைஞரின் கனவு இல்லம் திட்டம், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் நேரடியாக பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
மேலும் தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், முதல்வரின் முகவரி மனுக்கள் மீதும் உடனடி தீர்வு காண அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அரிதாஸ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதி, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) முகுந்தன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தமிழரசன், மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகர் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.