வில்லிவாக்கத்தில் பள்ளத்தில் தேங்கிய கழிவுநீர் சாலையில் வெளியேற்றம்: கடும் துர்நாற்றம்; பொதுமக்கள் அவதி
அம்பத்தூர்: வில்லிவாக்கத்தில் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கியிருந்த கழிவுநீரை நேற்று மின்மோட்டார் மூலம் மாநகராட்சி ஊழியர்கள் அடாவடியாக இறைத்து, அந்த கழிவுநீரை பைப்புகள் மூலம் சாலையில் வெளியேற்றினர். இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியதால் வாகன ஓட்டிகள் பெரிது அவதிப்பட்டனர்.
சென்னை மாநகராட்சி, அம்பத்தூர் மண்டலம், 94வது வார்டான வில்லிவாக்கம், சிட்கோ நகரில் நீண்ட காலமாக மழைநீர் கால்வாய் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், இப்பகுதியில் மழைநீர் கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் அதிகளவு கழிவுநீர் தேங்கியிருந்தது. இதனால் ஏற்பட்ட கடும் துர்நாற்றத்தால் மக்கள் அவதிப்பட்டனர். இதுபற்றி வார்டு கவுன்சிலரும் 85து மண்டல குழுத் தலைவர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில், மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கியிருந்த கழிவுநீரை நேற்று டிராக்டரில் உள்ள மின்மோட்டார் மூலம் மாநகராட்சி ஊழியர்கள் அடாவடியாக வாரியிறைத்து, அதை அங்குள்ள சாலையிலேயே வெளியேற்றினர். இதனால் அச்சாலை வழியே சென்ற வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் துர்நாற்றம் தாங்க முடியாமல் பெரிதும் அவதிப்பட்டனர். தற்போது அச்சாலையில் தேங்கியுள்ள கழிவுநீரால் சுகாதார சீர்கேடுகள் நிலவுவதுடன், அப்பகுதி மக்களுக்கு மர்ம காய்ச்சல் உள்பட பல்வேறு நோய்தொற்றுகள் பரவும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது. இவற்றை தடுத்து, முறையாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.