நூற்புழுக்களை நாம் சாதாரண கண்களால் காண இயலாது. நுண்ணோக்கிகள் வாயிலாக மட்டுமே காண முடியும். நிறமற்றதாகவும், ஆண், பெண் உருவ வேற்றுமை கொண்டதாகவும் இருக்கும். நூற்புழுக்கள் இனச்சேர்க்கையின் மூலமோ, இனச்சேர்க்க இல்லாமலோ, முட்டைகளை தனித்தனியாகவோ, குவியல் குவியலாகவோ, மண் மற்றும் தாவர திசுக்களில் இட்டு இனப்பெருக்கம் செய்யும். நூற்புழுக்கள் தன்னிச்சையாக தம் வாழ்நாளில் 2 சென்டிமீட்டர்...
நூற்புழுக்களை நாம் சாதாரண கண்களால் காண இயலாது. நுண்ணோக்கிகள் வாயிலாக மட்டுமே காண முடியும். நிறமற்றதாகவும், ஆண், பெண் உருவ வேற்றுமை கொண்டதாகவும் இருக்கும். நூற்புழுக்கள் இனச்சேர்க்கையின் மூலமோ, இனச்சேர்க்க இல்லாமலோ, முட்டைகளை தனித்தனியாகவோ, குவியல் குவியலாகவோ, மண் மற்றும் தாவர திசுக்களில் இட்டு இனப்பெருக்கம் செய்யும். நூற்புழுக்கள் தன்னிச்சையாக தம் வாழ்நாளில் 2 சென்டிமீட்டர் நீளம் வரை நகரக்கூடியவை. பாசன நீர், மழை, வெள்ளம், காற்று, வேளாண் கருவிகள் மற்றும் நடவு பொருட்கள் ஆகிய காரணிகளின் மூலமாக பரவக்கூடியவை. தாவர நூற்புழுக்கள் பொதுவாக வேர்ப் பகுதியைச் சுற்றி சுமார் 25 சென்டிமீட்டர் ஆழம் வரை காணப்பட்டாலும், பல ஆண்டு பயிர்களில் வேரின் முழு நீளம் வரை காணப்படும். பயிர்களை தாக்கக்கூடிய நூற்புழுக்களின் தலைப்பாகத்தில் சிறிய கூர்மையான ஊசி போன்ற உறுப்பை பெற்றிருக்கும். இந்த ஊசி போன்ற பாகத்தைதான் பயிர் களின் உட்செலுத்தி பயிரின் சாற்றினை உறிஞ்சும்.
நேரிடை பாதிப்பு
தாவர செல்களின் உள்ளோ அல்லது இடையிலோ ஊடுருவுவதால் காயங்கள் ஏற்படும். தாவர செல்களில் உள்ள சாற்றை நூற்புழுக்கள் உறிஞ்சுவதால் செல்கள் ஒன்றன்பின் ஒன்றாக அழுகி மடிந்துவிடும். தாவரத்தின் சாறு தொடர்ந்து உறிஞ்சப்படுவதால் நீர் மட்டும் சத்து பொருட்களின் கிரகிப்புத்தன்மை குறைந்து விடும். வளரும் வேரின் நுனிப்பகுதி பாதிக்கப்படுவதால் வேர்கள் உருமாற்றம் அடைந்து செயலிழந்து செடிகளின் வளர்ச்சி குறையும். விதை முளைப்பின்போதே நூற்புழு பாதிப்பு ஏற்பட்டால் நாற்றுகள் பெருமளவில் மடிந்து விடும். பூக்களின் இனப்பெருக்க உறுப்புகள் பாதிப்பதால் முடிச்சுகளாக மாறிவிடும். நூற்புழு தாக்கினால் மணிகள் முடிச்சுகளாக உருமாறும்.
மறைமுக பாதிப்பு
நூற்புழுக்களால் ஏற்படுத்தப்படும் நுண்ணிய கிருமி போன்றவற்றால் இதர மண் வாழ் ஜீவராசிகளான பூஞ்சாணம் மற்றும் பாக்டீரியாக்கள் கவர்ந்திழுக்கப்பட்டு பயிரினுள் பகுந்து நூற்புழுக்களுடன் சேர்ந்து கூட்டு நோயை உண்டாக்கும். பயிர்களில் ஆங்காங்கே திட்டு திட்டாக வெளியேறி வளர்ச்சி குன்றி வாடிய தோட்டத்துடன் காணப்படும். பல்வேறு வகையான நூற்புழுக்களின் தாக்குதலை பொறுத்து விதை, இலை, தண்டு, மணி, கதிர், வேர் மற்றும் கிழங்குகள் உருமாறி விளைச்சல் குறைந்து காணப்படும். தக்காளி, வெண்டை, கத்தரி, மிளகாய் ஆகியவை வேர் முடிச்சு நூற்புழு, வேர் அழுகல் நூற்புழு, சுருள் வடிவ நூற்புழு, மொச்சை வடிவ நூற்புழுக்களால் பாதிக்கப்படும். உருளைக்கிழங்கு பொன்னிற நூற்புழு, முட்டை கூடு நூற்புழுவால் பாதிக்கப்படும். வாழை வேர் துளைப்பான் நூற்புழு, வேர் அழுகல் நூற்புழு, வேர் முடிச்சு நூற்புழுவால் பாதிக்கப்படும். பயறு வகை பயிர்கள் முட்டை கூடு நூற்புழுவாலும், எலுமிச்சை செடி எலுமிச்சை நூற்புழுவாலும், நெல் பயிர்கள் நெல் வேர் நூற்புழு, வெண் நுனி இலை நூற்புழு, வேர் முடிச்சு நூற்புழுவாலும் பாதிக்கப்படும்.தாவர நூற்புழுக்களினால் உலக அளவில் 12.3 சதவீத விளைச்சல் இழப்பு ஏற்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் நூற்புழுக்களினால் ஏற்படும் விளைச்சல் ரூபாய் 500 மில்லியனுக்கு அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. ஆகையால் கண்ணிற்கு புலப்படாத இத்தகைய பயிர் எதிரிகளை உரிய நேரத்தில் கண்டறிந்து தேவையான கட்டுப்பாடு முறைகளை மேற்கொள்வது மிக அவசியம்.
சேதார அறிகுறிகள்
பொதுவாக நூற்புழுக்கள் வயல் முழுவதும் சீராக இருக்காமல் இயற்கையிலேயே ஆங்காங்கே திட்டு திட்டாக இருக்கும். ஆகையால் எங்கெல்லாம் நூற்புழுக்கள் காணப்படுகின்றதோ அங்கெல்லாம் பயிர்கள் வளர்ச்சி குன்றி காணப்படும். பயிர் வேர்களில் நூற்புழுக்கள் ஏற்படுத்தும் காயங்களால் திசுக்கள் மற்றும் உறிஞ்சி குழாய்கள் சேதப்படுத்தப்பட்டு பயிர்களின் சத்து கிரகிப்பு திறன் குறைகிறது. இலைகள் சிறுத்து, மஞ்சளாகி உரிய காலத்திற்கு முன்னதாகவே பழுப்பு நிறமடைந்து விடும். நூற்புழுக்கள் பயிர்களின் வேர்களில் சேதங்களை ஏற்படுத்துவதால் போதிய ஈரம் இருப்பினும் பாதிக்கப்பட்ட வேர்களால் தேவைக்கு ஏற்ப நீரை நிலத்திலிருந்து உறிஞ்ச முடியாத நிலை ஏற்படும். ஆகையால் பாதிக்கப்பட்ட பயிர்கள் வாடிய தோற்றத்துடன் காணப்படும்.
(நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து அடுத்த இதழில் காணலாம்).