உடுமலை அருகே கோயிலில் வழிபாட்டுக்கு அனுமதி கேட்டு கிராம மக்கள் மறியல்: மாற்றுப்பாதையில் சென்ற லாரி கால்வாயில் கவிழ்ந்தது
உடுமலை: உடுமலை அருகே கோயிலில் வழிபாடு செய்ய அனுமதிகோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து ஸ்தம்பித்ததால் மாற்றுப்பாதையில் சென்ற லாரி கால்வாயில் கவிழ்ந்தது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பள்ளபாளையம் பகுதியில் உள்ள கோயிலில் பல ஆண்டு காலமாக பொதுமக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஒரு தரப்பினர் பிரச்னை செய்ததால் கிராம மக்களுக்கு வழிபாடு நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பள்ளபாளையம் கிராமத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உடுமலை-தளி சாலையில் இன்று காலை சுமார் 8.30 மணியளவில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவ்வழித்தடத்தில் 2 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த உடுமலை டிஎஸ்பி நமச்சிவாயத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உரிய தீர்வு காணப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து 10 மணியளவில் போராட்டம் முடிவுக்கு வந்தது. இதற்கிடையில், மறியல் போராட்டம் காரணமாக போக்குவரத்து ஸ்தம்பித்ததால் வாய்க்கால்மேடு வழியாக வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன. அப்போது அந்த வழியாக சென்ற லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, உடுமலை கால்வாயில் கவிழ்ந்தது. டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்து குறித்து தளி போலீசார் விசாரிக்கின்றனர். உடுமலை கால்வாயில் தற்போது பிஏபி 4ம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் செல்வது குறிப்பிடத்தக்கது.