*விரைவில் பஸ் வரும் என எதிர்பார்ப்பு
பட்டுக்கோட்டை : பேருந்து வசதி பெறுவதற்காக நிதி திரட்டி சாலை, பாலம் அமைக்கும் பணியில் கிராம மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். கிராமத்திற்கு விரைவில் பஸ் வரும் என எதிர்பார்த்துள்ளனர்.
பட்டுக்கோட்டை அருகே கீழப்புனல்வாசல் கிராமத்தைச் சுற்றி வாடிக்காடு, ராமகிருஷ்ணபுரம் ஆகிய மூன்று கிராமங்களிலும் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 3,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு அதிகம் கூலி தொழிலாளிகள் மற்றும் விவசாயிகள் உள்ளனர்.
இந்த கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கை தங்கள் ஊருக்கு பேருந்து வசதி வேண்டும் என்பதுதான். சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து தற்போதுவரை கீழப்புனல்வாசல் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புனல்வாசல் நால்ரோட்டிற்கும், அதேபோல் வாடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புனல்வாசல் நால்ரோட்டிற்கும், ராமகிருஷ்ணபுரம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புனல்வாசல் நால்ரோட்டுக்கும் சென்றுதான் பேருந்து ஏற வேண்டும். பேருந்து வசதி இல்லாமல் பல ஆண்டுகளாக கால விரையத்திற்கும், பெரும் மன உளைச்சலுக்கும் ஆளாகி வந்தனர்.
இந்நிலையில் பொதுமக்கள் நிதியளிப்பு 5 லட்சத்துடன் பேருந்து வந்து செல்வதற்கான பாதையை கடந்த ஜூலை மாதம் 20ம் தேதி உருவாக்கத் தொடங்கினர். தற்போது பாதைகள் மற்றும் 3 பாலங்கள் விரிவுபடுத்தும் பணி மும்மரமாக நடந்து வருகிறது. தற்போது இறுதிகட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.
இது குறித்து கீழப்புனல்வாசல் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சித்ரா, சதீஷ்குமார், மதியழகன்,மணிமாறன், சதீஷ் ஆகியோர் கூறுகையில், எங்கள் தொகுதி எம்.எல்.ஏ அசோக்குமாரை சந்தித்து கோரிக்கை வைத்தபோது, பேருந்து வசதி நிச்சயம் ஏற்படுத்தித் தருவதாக உறுதியளித்தார்.
அதனைத் தொடர்ந்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளை அணுகியபோது பேருந்து வந்துசெல்ல சாலைகளை சரி செய்வதற்கு காலதாமதம் ஆகும் என்ற நிலை உருவானது.இதனால் எங்கள் கிராமத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து சாலைகள் மற்றும் 3 பாலங்களை விரிவுபடுத்தி 99 சதவீத பணிகளை முடித்து தற்போது இறுதி கட்டப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.