கிணத்துக்கடவு : நெகமம் அருகேயுள்ள கருமாபுரம் கிராமத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பொள்ளாச்சி பல்லடம் ரோட்டிலுள்ள கருமாபுரம் பிரிவில் இருந்து கிராமத்திற்கு செல்ல ஏற்கனவே சர்வீஸ் ரோடு இருந்து வந்தது. இந்த சாலையை கொண்டேகவுண்டன்பாளையம், கள்ளிப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், பொள்ளாச்சி, பல்லடம் நெடுஞ்சாலையை நான்கு வழி சாலையாக அமைக்கப்பட்டபோது அங்கு தடுப்புச்சுவர் அமைத்து சர்வீஸ் சாலை மூடப்பட்டது. இதனால் கிராமங்களுக்கு செல்லும் விவசாயிகள் பொதுமக்கள் நீண்ட தூரம் சென்று கிராமத்திற்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கிராமத்திற்கு செல்லும் வழி பாதையை அடைத்து வைத்துள்ள தடுப்பு சுவரை அகற்றி சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும்.
என்று சார் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பொள்ளாச்சி பல்லடம் நெடுஞ்சாலையில் உள்ள கருமாபுரம் பிரிவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இது குறித்து தகவல் அறிந்து வந்த பொள்ளாச்சி வட்டாட்சியர் வாசுதேவன் மற்றும் காவல்துறையினர், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதில் அதிகாரிகள் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தினால் பொள்ளாச்சி பல்லடம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.