பள்ளிப்பட்டு: தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் மக்களை சென்றடையும் வகையில், அனைத்து இடங்களிலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன. இதில் ஏராளமான மக்கள் கோரிக்கை மனுக்கள் வழங்கி பயனடைந்து வருகின்றனர். இதேபோல் திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் உள்ள 33 ஊராட்சிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் நடந்துள்ளன. தற்போது 3 முகாம்களில் நடத்த வேண்டியதை 2 முகாம்களாக குறைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கொடிவலசா ஊராட்சியில் உள்ள அத்திமாஞ்சேரிபேட்டையில் வரும் 18ம் தேதி உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடக்கிறது. இதில் கொடிவலசா, நெடியம், சாமந்தவாடா ஆகிய 3 ஊராட்சிகளை சேர்ந்த கிராம மக்கள் பங்கேற்க வேண்டும் என்று ஊராட்சி சார்பில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. எனினும், சுமார் 15 கிமீ தொலைவில் உள்ள அத்திமாஞ்சேரிப்பேட்டையில் நடக்கும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பங்கேற்க நெடியம், சாமந்தவாடா ஊராட்சிகளை சேர்ந்த கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அதற்கான விண்ணப்பப் படிவங்களை பெறுவதற்கு மறுத்துள்ளனர்.
மேலும், எங்களது பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை நடத்த வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர். இதேபோல் வெளியகரம் ஊராட்சி நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பங்கேற்க சூராஜிபட்டடை, ராமச்சந்திராபுரம் ஊராட்சிகளை சேர்ந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுபற்றி மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து, அந்தந்த பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.