Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வனத்துறையின் நடவடிக்கையை கண்டித்து ஊட்டி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

ஊட்டி : அஜ்ஜூர் கிராம மக்களுக்கு எதிராக மாவட்ட வனத்துறையால் தொடங்கப்பட்ட வெளியேற்ற நடவடிக்கைககள் நிரந்தரமாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் பாரம்பரிய ஆடையுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து, கிராம மக்கள் மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

ஊட்டி அருகேயுள்ள அஜ்ஜூர் கிராமத்தில் 350 குடும்பங்கள் வசிக்கின்றோம். இங்கு வசிக்கும் மக்கள் படுகர் இனத்தை சேர்ந்த மக்கள். இங்கு சுமார் 300 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருகிறோம். இந்நிலையில், நாங்கள் வசிக்கும் பகுதி வனத்துறைக்கு சொந்தமானது எனக்கூறி எங்களை வெளியேற்ற அறிவிப்புகள் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வனச்சட்டத்தின் கீழ் எங்களை வெளியேற்ற வனத்துறை தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த அறிவிப்பின்படி, நாங்கள் வசிக்கும் வீடுகள், தேயிலை தோட்டங்கள் மற்றும் விவசாய நிலங்களில் இருந்து வெளியேற வேண்டும் என வனத்துறை அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு, காடுகளை பாதுகாக்கும் நோக்கமாக கொண்டிருந்த போதிலும், எங்கள் முழு கிராமத்தின் வாழ்வாதாரத்தையும், கலாச்சாரத்தையும், இருப்பையும் நேரடியாக பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.

எங்கள் கிராம நிலத்தை ஒரு காப்பு காடாக மாற்றுவதே வனத்துறையின் நோக்கமாக கூறப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால், தலைமுறை தலைமுறையாக இந்த நிலத்தில் வாழ்ந்து வேலை செய்து வந்த நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு, அவர்களின் வாழ்வாதாரத்தையும், கலாச்சார பாரம்பரியத்தையும் சீர்குலைக்கும் நிலை உருவாகும்.

இந்த நிலங்களை நாங்கள் பல தலைமுறையாக பயன்படுத்தி வருகிறோம். இது ஆக்கிரமிப்பு இல்லை. மாறாக பல நூற்றாண்டுகள் பழமையான குடியேற்றத்தின் தொடர்ச்சியாகும். நிலத்தின் மீதான எங்கள் சட்டபூர்வமான உரிமைக்கான ஆவண ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன.

அஜ்ஜூரில் உள்ள சில குடும்பங்களுக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், அதற்கான நிலப்பதிவுகள் 1912 மற்றும் 1981ம் ஆண்டிலேயே முடிக்கப்பட்டள்ளன. மேலும், நாங்கள் வசிக்கும் பகுதிக்கு தலைமுறை தலைமுறையாக வரியும் செலுத்தி வருகிறோம். இதற்கான சான்றுகள் எங்களிடம் உள்ளது. வனத்துறையினர் வெளியேற்றுத் திட்டம் செயல்படுத்தினால், இங்கு வசிக்கும் 350 குடும்பங்கள் பாதிக்கும். எங்களை வீடற்றவர்களாக மாற்றும்.

எங்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கும். இந்த நடவடிக்கை எங்களின் அடிப்படடை வாழ்க்கை உரிமையையும், வாழ்வாதாரத்தையும் மீறுவதாக அமையும். மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாக இந்த நிலங்களை வளர்த்த ஒரு சமூகமாக எங்கள் மூதாதையர் உரிமைகளையும் புறக்கணிக்கும்.

முறையான மறு வாழ்வு அல்லது எங்களை உரிமைகளை அங்கிகரிக்கமால் எங்கள் கிராம நிலத்தை ஒரு காப்பு காடாக மாற்ற முன்மொழியப்பட்டிருப்பது மிகப்பெரிய அநீதியாகும். எனவே, அஜ்ஜூர் கிராம மக்களுக்கு எதிராக மாவட்ட வனத்துறையால் தொடங்கப்பட்ட வெளியேற்ற நடவடிக்கைககள் நிருந்தரமாக நிறுத்த வேண்டும்.

சட்டம் மற்றும் இயற்கை நீதியின் கொள்கையின்படி, 596/1 மற்றும் 596/2 கணக்கெடுப்பு எண்களின் கீழ் விவசாயம் நிலம் மற்றும் குடியிருப்புகளை பயன்படுத்தி வரும் 350 குடும்பங்களுக்கும் எங்கள் வரலாற்று பயன்பாட்டை அங்கீகரித்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2006ம் ஆண்டு வன உரிமைகள் சட்டம் உட்பட தொடர்புடைய சட்டத்தின் கீழ் எங்கள் உரிமைகள் போதுமான அளவு பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய, ஒரு பழங்குடியினராக எங்கள் வரலாற்று நிலையை கருத்தில் கொண்டு எங்கள் சமூகத்தின் வகைப்பாட்டினை விரிவான மதிப்பாய்வு செய்ய வேண்டும்.

நீலகிரியில் எந்த ஒரு எதிர்கால நில பயன்பாட்டுத் திட்டமும், எங்களை போன்ற நீண்டகால சமூகங்களின் உரிமைகள் மற்றும் வாழ்வாதரங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மனித வாழ்விடத்தை மதிக்கும் நிலையான வளர்சியை ஊக்குவிக்கும். இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.