கல்வராயன்மலை: கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை மிகவும் அடர்ந்த ஒரு வன பகுதியாக உள்ளது. இங்கு 171 மலை கிராமங்கள் உள்ளது. மேலும் இந்த பகுதியில் வன விலங்குகள் அதிகமாக உள்ளது. ஒரு சில நேரங்களில் வன விலங்குகள் குடியிருப்பு பகுதிக்கு வந்துவிடுகின்றன. இந்நிலையில் நேற்று கல்வராயன்மலை அருகே உள்ள மாவடிப்பட்டு கிராமத்திற்குள் காட்டு மாடு ஒன்று புகுந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் அதனை விரட்ட முயன்றனர்.
அப்போது காட்டு மாடு பொதுமக்களை மிரட்டும் வகையில் அவர்களை நோக்கி ஓடியது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து சிதறி ஓடினர்.இதில் ஒரு சிலர் அங்கிருந்த கற்களை வீசி காட்டு மாட்டை விரட்ட முயன்றபோது காட்டு மாடு அப்பகுதியில் உள்ள ஒரு ஓடை பகுதியில் சென்று பதுங்கியது. பின்னர் இது குறித்து பொதுமக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்து வனத்துறை அதிகாரிகள் காட்டு மாட்டை வனப்பகுதிக்குள் விரட்டிவிட்டனர்.