Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தடுப்பணை நீரில் மூழ்கி ஊராட்சி செயலர் உள்பட 4 பேர் பரிதாப பலி: திருவாரூர் அருகே சோகம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா வில்லியனூர் கிராமத்தை சேர்ந்த சேகர் மகன் மணிகண்டன்(30). மானந்தான்குடி அய்யம்பேட்டை ஊராட்சி செயலர். இவர், நேற்று மாலை 5மணியளவில் உறவினர்களான ஜெயக்குமார்(30), ஹரிஹரன்(30), மணிவேல்(28) ஆகியோருடன் நன்னிலம் அருகே கீழ்குடி புத்தாறு தடுப்பணைக்கு காரில் சென்றார். பின்னர் அவர்கள், 5.30 மணியளவில் 20 அடி ஆழ தடுப்பணையில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென நீரில் மூழ்கினர்.

கிராம மக்கள் தகவலின் பேரில், நன்னிலம் தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்து அவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். தொடர்ந்து ஒரு மணி நேர தேடுதலுக்கு பின்னர் 4 பேரையும் மீட்டு நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், 4பேரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து நன்னிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 4 பேர் இறந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

* பர்வத மலைக்கு சென்ற சென்னை பெண் பக்தர்கள் 2 பேர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழப்பு

சென்னை திருவேற்காடு பகுதியை சேர்ந்த வடபழனியின் மனைவி தங்கத்தமிழ்(36), மனோகரன் மனைவி இந்திரா(58) உட்பட 15 பேர் கடந்த 9ம் தேதி பர்வதமலைக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். இரவு அங்கேயே தங்கினர். நேற்றுமுன்தினம் மாலை 6 மணி அளவில் கீழே இறங்கி வந்து கொண்டிருந்தனர். மலையடிவாரத்தில் உள்ள வீரபத்ர சுவாமி கோயில் மற்றும் பச்சையம்மன் கோயில் இடையே ஓடை கால்வாயில், தொடர் மழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஒவ்வொருவராக ஓடை கால்வாயை கடந்து அக்கரைக்கு சென்றனர்.

அப்போது, தங்கத்தமிழ், இந்திரா ஆகிய இருவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். தகவலறிந்து வந்த போளூர் தீயணைப்பு வீரர்கள் ஓடை கால்வாயை கடக்க முடியாமல் தவித்த மற்றவர்களை கயிறு கட்டி மீட்டு விடுதியில் தங்க வைத்தனர். இந்நிலையில் 2வது நாளாக நேற்று, ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 20பேர் கொண்ட குழுவினர் வந்து 2 பெண் பக்தர்களையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் தென்மகாதேவமங்கலம் கிராமத்தில் இருவரது சடலமும் கண்டெடுக்கப்பட்டது.