சென்னை: தமிழ்நாடு முதல்வரிடம் தமிழ்நாடு, கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் இரா.அருள்ராஜ் ஒரு கோரிக்கை மனு அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது: பாரத பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் 2025-26 நடப்பாண்டிற்கு ராபி சிறப்பு பருவத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள நெல் பயிர் உள்ளிட்ட 11 பயிருக்கு காப்பீடு செய்ய நவம்பர் 15ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. தீபாவளி மற்றும் ஆயுதபூஜை விடுமுறை காரணங்களாலும், தொடர் மழையின் காரணங்களாலும், கிராம அலுவலர்களாகிய நாங்கள் எஸ்ஐஆர் பணியில் ஈடுபட்டு வருவதாலும் பல விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். ஒரு நாட்டின் முதுகெலும்பானவர்கள் விவசாயிகள். அவர்களில் நலனில் அக்கறை கொண்ட தமிழ்நாடு முதல்வரும், தமிழக அரசும் விவசாய நலனுக்காக பயிர் காப்பீடு செய்யும் தேதியை நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்குமாறு தமிழ்நாடு, கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பாக பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
+
Advertisement
