Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக, பாமக வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல்: மேலும் 8 சுயேச்சைகளும் மனு செய்தனர்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட திமுக, பாமக வேட்பாளர்கள் நேற்று ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்தனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி, உடல்நல குறைவு காரணமாக இறந்ததை தொடர்ந்து, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் ஜூலை 10ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14ம் தேதி தொடங்கியது. 7 சுயேச்சைகள் மட்டும் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், நேற்று காலை இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வேட்பு மனுதாக்கல் செய்தார்.

அவருடன் அமைச்சர் பொன்முடி, எம்பிக்கள் ஜெகத்ரட்சகன், ரவிக்குமார், மாவட்ட செயலாளர் கௌதம சிகாமணி ஆகியோர் வந்திருந்தனர். இதையடுத்து, விக்கிரவாண்டியை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மதுரை விநாயகம் (51) ராணுவ சீருடையில் வந்து, வீரோ.கே.வீர் இந்திய கட்சி சார்பில் போட்டியிடுவதாக கூறி வேட்புமனு தாக்கல் செய்தார். மேலும் தேசிய முன்னாள் ராணுவ வீரர்கள் கட்சியின் சார்பில் முன்னாள் ராணுவ வீரர் வண்டலூர் ஆற்காட்டான் (45), அம்பேத்கரைட் பார்ட்டி ஆப் இந்தியா கட்சி சார்பில் சேலத்தை சேர்ந்த சரசு (40), தாக்கம் என்கிற கட்சியின் சார்பில் திண்டிவனத்தை சேர்ந்த வழக்கறிஞர் முத்தையா (49), அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சி சார்பில் வானூர் வட்டம் சேமங்கலம் பகுதியை சேர்ந்த மூர்த்தி (43) ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இவர்களை தொடர்ந்து நேற்று கடைசியாக பாமக சார்பில் அன்புமணி வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது பாமக தலைவர் அன்புமணி, கவுரவ தலைவர் ஜி.கே.மணி, பாஜ மாநிலத் துணைத் தலைவர் ஏ.ஜி சம்பத், மாவட்ட செயலாளர் கலிவரதன், பாமக மயிலம் சிவக்குமார் எம்எல்ஏ ஆகியோர் உடன் இருந்தனர். இதேபோல் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவின் மனைவி வனிதா, தமிழ்தாயக மக்கள் முன்னேற்ற கட்சி சார்பில் முகமதுஹனிபா, முகமது இல்யாஸ் ஆகியோரும் மனுதாக்கல் செய்தனர்.