Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

27 ஆண்டுகளுக்கு முன்பு விஜய்மல்லையா தானம் சபரிமலையில் 30 கிலோ தங்கம் மாயமா? பரபரப்பு தகவல்கள்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் பணிகளுக்காக 27 வருடங்களுக்கு முன் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா வழங்கிய 30.300 கிலோ தங்கம் மாயமானதாக கூறப்படுவது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சபரிமலை ஐயப்பன் கோயிலில் எந்த முக்கியப் பணிகளை நடத்த வேண்டும் என்றாலும் கேரள உயர்நீதிமன்றத்தின் அனுமதி பெறாமல் செய்ய முடியாது. அனைத்துப் பணிகளையும் உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பில் மட்டுமே நடத்த முடியும். ஆனாலும் இந்தக் கோயிலில் முறைகேடுகள் நடைபெறுவதாக அடிக்கடி தகவல்கள் வெளியாகி வருகின்றன.

பக்தர்கள் நன்கொடையாக வழங்கும் பணம் மற்றும் பொருட்களை திருடுவது, அன்னதானம் மற்றும் கோயில் வளர்ச்சிக்காக பக்தர்கள் நன்கொடையாக வழங்கும் பணத்தை மோசடி செய்தது உள்பட பல சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.  இந்நிலையில் ஐயப்பன் கோயிலில் தங்கத் தகடுகள் பதிப்பதற்காக கடந்த 27 வருடங்களுக்கு முன் பெங்களூருவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா வழங்கிய 30.300 கிலோ தங்கத்திலும் முறைகேடு நடந்துள்ளதாக தற்போது வெளியாகி உள்ள தகவல் அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சபரிமலை ஸ்ரீகோயிலில் தங்கத் தகடுகள் பதிக்க வேண்டும் என்று கடந்த 30 வருடங்களுக்கு முன் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தீர்மானித்தது. இதுகுறித்து அறிந்த பெங்களூருவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, தான் அந்தப் பணிகளை செய்து தருவதாக தேவசம் போர்டிடம் கூறினார். அதற்கு தேவசம் போர்டும் சம்மதித்தது. இதன்படி கடந்த 1998ம் ஆண்டு சபரிமலை ஸ்ரீகோயில் கூரை, நடை, கதவு, முன்புறமுள்ள 2 துவாரபாலகர் சிலைகள் உள்ளிட்ட பகுதிகளில் தங்கத் தகடுகள் பதிக்கப்பட்டன.

இதற்காக விஜய் மல்லையா 30.300 கிலோ தங்கமும், 1900 கிலோ செம்பும் நன்கொடையாக வழங்கினார். இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டு கோயில் நடையில் பதிக்கப்பட்டிருந்த தங்கத் தகடுகள் பழுது பார்ப்பதற்காக சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டன. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த உண்ணிகிருஷ்ணன் போத்தி என்பவர் பழுது பார்க்கும் பணிகளை இலவசமாக செய்து தருவதாக கொண்டு சென்றுள்ளார். சென்னைக்கு கொண்டு செல்லும்போது இவற்றின் எடை 40 கிலோவுக்கு மேல் இருந்தது.

ஆனால் பணிகள் முடிந்து சபரிமலைக்கு கொண்டு வந்த போது இதன் எடையில் 4 கிலோ குறைந்தது. இந்த விவரம் தற்போது தான் வெளியே வந்தது. இதற்கிடையே சென்னைக்கு கொண்டு செல்லப்பட்ட 2 துவாரபாலகர் சிலைகளில் இருந்த தகடுகளில் தங்கம் எதுவும் இல்லை என்றும், அவை முழுவதும் செம்புத் தகடுகள் தான் என்றும் பழுது பார்த்த சென்னை நிறுவனத்தினர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் கூறியுள்ளார்.

* நடிகர் ஜெயராம் வீட்டில் பூஜை நடந்தது எப்படி?

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த உண்ணிகிருஷ்ணன் போத்தி கடந்த 2019ம் ஆண்டு துவாரபாலகர் சிலையில் இருந்த தகடுகள் மற்றும் ஸ்ரீகோயிலின் வாசலின் முன்புறமுள்ள பகுதிகளில் பதிக்கப்பட்டிருந்த தகடுகளை பழுது பார்ப்பதற்காக சென்னைக்கு கொண்டு சென்றார். சென்னை அம்பத்தூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் வைத்துத் தான் இவை பழுதுபார்க்கப்பட்டன. பணிகள் முடிந்தபின் அவற்றுக்கு உண்ணிகிருஷ்ணன் போத்தியின் தலைமையில் அங்கு வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

இந்த பூஜையில் நடிகர் ஜெயராம், பிரபல பக்தி பாடகர் வீரமணி ராஜு உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதன்பின் இவை சென்னையில் உள்ள நடிகர் ஜெயராமின் வீட்டில் வைத்தும் பூஜை நடத்தப்பட்டது. இதை ஜெயராமும் உறுதி செய்துள்ளார். சபரிமலை கோயிலில் தங்கத்தகடுகள் பதிப்பதாக கூறி உண்ணிகிருஷ்ணன் போத்தி பலரிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் வசூலித்ததாகவும் கூறப்படுகிறது. இவர் கேரள முதல்வர் பினராயி விஜயன், டிஜிபி ரவடா சந்திரசேகர் உள்பட பல முக்கிய பிரமுகர்களிடம் நெருக்கத்தை ஏற்படுத்தி உள்ளார்.

இவர்களுடன் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு தனக்கு பெரும் செல்வாக்கு இருப்பதாக காண்பித்துள்ளார். கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களிடம் நெருக்கத்தை ஏற்படுத்தி அவர்களுக்காக சபரிமலையில் பூஜை செய்வதாக கூறி லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்த தேவசம் லஞ்ச ஒழிப்புத்துறை தீர்மானித்துள்ளது.